தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற வன்னிப் பெருநிலப்பரப்பில் இன்று காலை (06.04.2016) 9.00 மணியளவில் புதுவருடப்பிறப்பு நிகழ்வுகள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர்.ஜெனரல் ஆர்.என்.ஜே.ஏ.ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இதில் அழகுராணித் தெரிவும் இடம்பெற்றது. யுத்தம் நிறைவடைந்து 06ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் வடகிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களும், களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெறுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன நல்லுறவுகளைப்பேணும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துகின்றோம் என இராணுவத்தரப்பு கூறுகிறது. ஒரு இனப்படுகொலையை செய்த இராணுவத்தினர் வடகிழக்கில் இந்நிகழ்வுகளை கொண்டாடுவது என்பது தமிழ் மக்களுக்கிடையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் ஒரு கலை நிகழ்வையோ, கூட்டங்களையோ நடாத்தினால் அதனைச் சூழ இராணுவப் புலனாய்வாளர்கள் குவிக்கப்படுகிறார்கள். தொடர்ந்தும் நாம் ஒரு அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றோம். இராணுவத்தினரின் கொண்டாட்டங்களின் மூலம் இவர்களினால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைச் சம்பவத்தை மூடிமறைக்கும் நோக்கிலேயே இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் அமைந்துள்ளது என எண்ணத்தோன்றுகின்றது. வடகிழக்கில் இராணுவ மயமாக்கல் குறைக்கப்படும் என நல்லாட்சி அரசு கூறியபோதிலும், அவை நடைமுறைக்குச் சாத்தியமாகாதவையாகவே தொடர்கின்றது என்றும் த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.