வரலாற்று சாதனை படைத்தார் மைக்கேல் பெல்ப்ஸ்

208

ரியோ ஒலிம்பிக்கில்  தனது 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்.

கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை, அமெரிக்க நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்சின் கணக்கில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் இருந்தன. போதுமென்ற மனதுடன் லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார். ஆனால் அவரால் வீட்டில் சும்மா கிடக்க முடியவில்லை. அதே வேளையில் கடந்த 2013ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பெல்ப்ஸ் இல்லாத அமெரிக்க அணி தொடர் நீச்சலில் பிரான்ஸ் அணியிடம்  தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கத்தோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

இதையடுத்து, பெல்ப்ஸ் ஓய்வுக்கு ஓய்வு அளித்து விட்டு மீண்டும் நீச்சல் குளத்திற்குள் குதித்தார். இதனால், ரியோ ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீச்சல் போட்டிகளை பொறுத்தவரை இந்த இரு நாடுகளுக்குமிடையேதான் எப்போதும் கடும்போட்டி இருக்கும். அதைப் போலவே ரியோவில் நேற்று 4×100  மீட்டர்  பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

எனினும் அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் கடந்து தங்கத்தை தட்டி சென்றது. பெல்ப்சின் ஸ்பிலிட் டைம் 47.12 விநாடிகளாக இருந்தது. மற்றொரு அனுபவமிக்க அமெரிக்க நீச்சல் வீரர் நாதன் ஆட்ரியனின் ஸ்பிலிட் டைம்  46.97 விநாடிகள். பெல்ப்ஸ் மற்றும் ஆட்டிரியனின் முயற்சியே அமெரிக்கக் குழு தங்கப் பதக்கம் வெல்ல  உதவியாக இருந்தது.

தற்போது பெல்ப்சின் ஒலிம்பிக் தங்கப்பதக்க எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெல்ப்ஸ் பங்கேற்கவிருக்கிறார். அதனால் அவரது கணக்கில் தங்கப்பதக்க எண்ணிக்கை இருபதை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE