-மன்னார் நகர் நிருபர்-
சிறு கைத்தொழில் முன்னேற்றத்திற்கு என கூட்டுறவு திணைக்களத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபா நிதி 2018ஆம் ஆண்டின் வரவு -செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது செப்டம்பர் மாதம் நடை பெறுகிறது. டிசம்பர் மாதத்திற்கு முன்பு அந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் அங்கத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (24) திங்கட்கிழமை பேசாலையில் அமைந்துள்ள மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தில் இடம் பெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வருட இறுதிக்குள் ஆரம்பிக்க வேளைத்திட்டங்களை ஆரம்பிக்கப்படாது விட்டால் அந்த நிதி இல்லாமல் திரும்பிப் போய் விடும்.
இது தான் இலங்கையில் இருக்கின்ற வரவு செலவுத்திட்ட நடை முறையின் படி அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதி மக்களால் அல்லது அந்த திணைக்களத்தால் பயண் படுத்த அல்லது நடை முறைப்படுத்தப்படாவிட்டால் அந்த நிதி மீளவும் அரசிடம் சென்று விடும்.
அதற்கு அரசை குறை சொல்லி பிரியோசனம் இல்லை. ஏனெனில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அதற்குரிய முன்மொழிவை கொடுத்து அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்குரிய வழிவகைகளை செய்ய வேண்டும்.
இந்த ஆயிரம் மில்லியன் ரூபாய் வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. அதை மக்கள் பயண்படும் வண்ணம் செயற்படுத்த வேண்டும்.என தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளில் புலமைப்பரிசிலில் நூறு புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் ,பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கும் , சிறந்த அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் , மேலும் சங்க வளர்ச்சிக்காக உழைத்து ஓய்வு பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் உற்பட சங்க நிர்வாகிகள் மதத்தலைவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




