வருமான வரிச் சோதனையின் எதிரொலியாக இன்று வெளியாகவிருந்த புலி படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் சிறப்புக் காட்சிகள் ரத்தாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “புலி’ படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 35 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். புகார்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இதனால் திட்டமிட்டப்படி புலி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளை முறையாகச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. க்யூப் தொழில்நுட்பத்துக்கான தொகை செலுத்தினால் மட்டுமே படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியும் என்கிற நிலையில் ‘புலி’ படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால், அவர்களின் வங்கி கணக்கைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் க்யூப் தொழில்நுட்பத்துக்குப் பணம் செலுத்தினால் மட்டுமே படம் வெளியாகும் என்பதால் குறித்த நேரத்தில் புலி படத்தை வெளியிடமுடியாமல் போனது.
முதல் பாதிப்பாக, வெளிநாடுகளில் புலி படத்தின் நேற்றிரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்ததாக, தமிழ்நாட்டில் இன்றைய சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
இந்நிலையில் புலி படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக புலி தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிகள் தான் ரத்தாகியுள்ளன. பகல் காட்சிகள் திட்டமிட்டபடி தொடங்கும், இனி படம் வெளியாவதில் எந்தச் சிக்கல்களும் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்கள்.