
கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் மழையினால் கிளிநொச்சி அக்கராயன் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில நாள் பெய்த மழைக்கே வீதியின் நிலமை இவ்வாறு காணப்படுகிறது என்றால் மாரி மழையின்போது வீதி எவ்வாறு காணப்படும் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கிளிநொச்சிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலான அக்கராயன் ஊடாகச் செல்லும் வீதி கடந்த பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்து கோணாவில், அக்கராயன், வன்னேரிக்குளம், ஜெயபுரம், முழங்காவில், இலுப்பைக்கடவை என பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியின் ஊடாக பயணம் செய்கின்றனர்.
இந்த வீதியின் ஊடாக பயணம் மேற்கொள்ளும் தாம் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து பல்வேறு முறைப்பாடுகளை செய்யும் பல தடவைகள் ஊடகங்களின் ஊடாக செய்திகளை வெளிப்படுத்தியும் இதுவரையில் உரியவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் குறித்த பிரதேசங்களுக்குப் பயணிக்கும் மக்கள் குளோபலுக்குத் தெரிவித்தனர்.
குறித்த வீதியின் ஊடாக ஸ்கந்தபுரம், அக்கராயன், வன்னேரி, முழங்காவில் உள்ளிட்ட பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன. வீதி சீரின்மை காரணமாக பேருந்து சேவைகள் மிகவும் தாமதப்படுவதுடன் பேருந்துகளில் பயணிக்கவும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
பாடசாலை மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என பல தரப்பட்டவர்களும் சேற்றில் குளித்து புழுதியில் மூழ்கியே இந்த வீதியின் ஊடாக செல்லுகின்றனர். இதனால் தாம் பல்வேறு அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆபத்தான தருணம் ஒன்றில் இந்த வீதியால் முற்றாக பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த பல தசாப்தங்களாக சேற்றில் குளித்தபடி மாரிகாலத்தை கடக்கும் தாங்கள் இம்முறையும் சேற்றில் குளிப்பதா என்றும் வீதியின் ஊடாக பயணம் செய்யும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த ஒரு சில நாட்களில் பெய்த மழையும் வீதியில் உள்ள குன்றுகளிலும் குழிகளிலும் மழைநீரும் சேறும் நிரம்பிக் காணப்படுகிறது.
விரைவில் தமது வீதியை புனரமைத்து தமது போக்குவரத்து நடவடிக்கையை சிரமங்களற்ற வகையில் மேற்கொள்ளவும் அதன் ஊடாக பின்தங்கிய குறித்த பிரதேசங்கள் முன்னேற்றம் பெறவும் உரியவர்கள் விரைந்து இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் கோருகின்றனர் பிரதேச மக்கள்.