பம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் வைத்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிலபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நாடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இவரை விட வெள்ளவத்தை பகுதியின் மேலும் இரு வர்த்தகர்களிடமும் பொலிஸார் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதனை விட மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுபிட்டியில் இருந்து தெஹிவளை வரையிலான அனைத்து சீ.சீ.ரி.வி. கமராக்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ள விசாரணையாளர்கள் அது தொடர்பில் பிரத்தியேகமாக மூன்று பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி மொத்தமாக இவ்விசாரணைகளுக்கு என 11 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலை மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாவனல்லை ஹெம்மாத்தகம வீதியின் உக்குலேகம எனும் இடத்தில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்தே அழுகிய நிலையில் அவர் இவ்வாறு நேற்று முன்தினம் இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கோடீஸ்வர வர்த்தகர் சகீப் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் கேகாலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரின் கீழ் 8 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையாகும் போதும் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் வெள்ளவத்தை, தெமட்டகொடை மற்றும் காலி வீதி பகுதிகளைச் சேர்ந்த ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நட்டிலிருந்து தப்பிச் செல்வதை தவிர்க்கும் முகமாக கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் மாலைவேளை, மாவனெல்லை பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. உக்குலேகம பள்ளத்தாக்கில் சில தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று உள்ளதகவும் துர்வாடை வீசுவதாகவும் அதில் தகவல் வழங்கிய பொது மகன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்துள்ள மாவனெல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சடலத்தை பார்வையிட்டுள்ளனர். அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த குறித்த சடலம் மீதான விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் ஏற்கனவே பம்பலபிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சகீப் தொடர்பில் கேகாலை பகுதியில் இருந்து கப்பம் கோரப்பட்டிருந்த நிலையில், சகீப் தொடர்பிலான தகவல்கள் கேகாலை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. பம்பலபிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மாவனெல்லை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்களை வைத்தும் மாவனெல்லை பொலிஸார் குறித்த அடையாளம் தெரியாத சடலம் மீது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது கொழும்பிலிருந்து வழங்கப்பட்டிருந்த சகீப் தொடர்பிலான தகவல்களில், அவர் இறுதியாக அணிந்திருந்த ஆடை தொடர்பிலான தகவல்கள், குறித்த அடையாளம் தெரியாத சடலத்துடன் ஒத்துப் போவதை மாவனெல்லை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அதனையடுத்து கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.டீ.ஏ. சேரசிங்க ஊடாக இது குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸாவுக்கு தகவல் பரிமாற்றப்பட்டுள்ளது.
அதன்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா, குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா தலைமையில் பம்பலபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரை கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் சகீப்பின் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் மாவனெல்லை பகுதிக்கு இரவு வேளையிலேயே அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு சென்ற குற்றத் தடுப்புப் பிரிவின் குழு, வர்த்தகர் சகீப்பின் குடும்ப அங்கத்தவர்கள் ஊடாக குறித்த சடலத்தை அடையாளம் காண முற்பட்டுள்ளனர். சகீப் இறுதியாக அணிந்திருந்ததாக கூறப்படும் நீல நிற டெனிம் நீண்ட காற்சட்டை மற்றும் அதற்குள் அணிந்திருந்த பிஜாமா ரக அரைக் காற்சட்டை ஆகிவற்றையும் காலுறை மற்றும் தலைமுடி உள்ளிட்ட அடையாளங்களையும் வைத்து சகீபின் தந்தை மற்றும் மனைவி உள்ளிட்டோர் சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
முகம் உள்ளிட்ட சடலத்தின் பல பகுதிகள் கடுமையாக அழுகியிருந்த நிலையில் சடலத்தின் மேல் பகுதியில் எவ்வித ஆடைகளும் இருக்கவில்லை. கீழ் பகுதியில் டெனிம் காற்சட்டையும் பிஜாமா அரைக்காற்சட்டையும் இடுப்பில் இருந்து சற்று கீழ் நோக்கி இறக்கப்பட்டிருந்தது. அத்துடன் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயங்களைக் காட்டும் அடையாளங்கள் காணப்பட்டன.
ஸ்தலத்தை குற்றப் பிரதேசமாக பிரகடனம் செய்த மாவனெல்லை பொலிஸார், பொலிஸ் தடயவியல் பிரிவினரையும் மோப்ப நாயினையும் வரவழைத்து விசாரணைகளை நேற்று காலை ஆரம்பித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மாவனெல்லை பிரதான நீதிவான் மஹிந்த லியனகம நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை நடத்தியதுடன் சடலத்தை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று பிற்பகல் கேகாலை போதனா வைத்தியசாலையில், கேகாலை பிரதான சட்ட வைத்திய அதிகாரி ரமேஷ் அழகியவண்ன முன்னிலையில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன. இதன் போது வர்த்தகர் சகீப் கடத்தப்பட்ட கடந்த 22 ஆம் திகதியே உயிரிழந்துள்ளமையும், தட்டையான ஆயுதம் ஒன்றினால் அவரின் கன்னத்துக்கு மேற்பகுதியில் அதாவது தலையின் முற்பகுதியில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவரின் மண்டை ஓடு சுக்கு நூறாகியுள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் தலையின் உட்பகுதியில் அதாவது மூளைப் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே மரணம் சம்பவித்துள்ளதாகவும் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி ரமேஷ் அழகியவண்னவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட சகீப் கொலை செய்யப்பட்ட தினம் இறுதியாக அவர் இரவு உணவுக்காக உட்கொண்ட ஆகாரம் சமிபாடடையவும் முன்னரேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
வர்த்தகர் சகீப் கடத்தப்பட்ட தினமே கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கடத்தப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் இந்த கொலை இடம்பெற்றிருப்பதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட பின்னர் சகீபின் சடலம் இவ்வாறு மாவனெல்லை – ஹெம்மாத்தகம வீதியின் பள்ளத் தாக்கில் கைவிடப்பட்டுள்ளதாகவும், இக்கொலை தொடர்பில் கேகாலை மற்றும் மாவனெல்லை ஹெம்மாத்தகம ஆகிய பகுதிகள் தொடர்பில் நன்கு பரீட்சயம் உள்ள ஒருவருக்கு தகவல் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த செவ்வாயன்று வர்த்தகர் சகீபை விடுவிக்க அவரது தந்தையிடம் 2 கோடி ரூபாவை கப்பமாக கோரியமையானது விசாரணைகளை திசை திருப்பும் வேலை எனவும் கப்பம் கோரும் போதும் சகீப் கொலை செய்யப்பட்டு சுமார் 36 மணி நேரம் கடந்திருந்திருக்க வேண்டும் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறித்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று முற்பகல், இக்கொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்று மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நடத்தப்பட்டுள்ளது. இதில் பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தை அண்மித்த அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகள், கொழும்பு தெற்கு மற்றும் மத்திய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
கடத்தல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய 8 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பணாமல்தெனிய மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் மேற்பார்வையிலும் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சேரசிங்கவின் மேற்பார்வையிலும் இந்த குழுக்கள் விசாரணைகளை முன்னெடுக்கின்றன. பிரதான விசாரணைக் குழுவுக்கு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா தலைமை தாங்குகின்றார்.
அத்துடன் பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாக உதவிகளைப் பெற்றுக்கொள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினதும் தேசிய உளவுப் பிரிவினதும் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
நேற்று மாலை வரை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேகிக்கத்தக்க ஐவர் தொடர்பிலும் 10 தொலைபேசி இலக்கங்கள் குறித்தும் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாத்த பீரிஸ் முன்னிலையில் அறிக்கை சமர்பித்த பம்பலபிட்டி பொலிஸார், சந்தேகிக்கத்தக்க ஐந்து பேர் வெளி நாடு செல்வதை தடுக்கும் விதமாக தற்காலிக தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மாவனெல்லை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மொஹம்மட் சகீப் சுலைமானின் படு கொலை தொடர்பில் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் சந்தேக நபர்கள் என கருதி ஐவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கும் நிலையில் அவர்கள் வெளி நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவ்லுக்கு அமைவாகவே இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று மாலை வரை 10 சந்தேகிக்கத்தக்க தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்திய விசாரணைகளும் தொடர்ந்தன.
இந்தோனேஷியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து துணி மணிகளை தனது தந்தையுடன் சேர்ந்து இறக்குமதி செய்யும் வர்த்தகரான மொஹம்மட் சகீப் சுலைமான் (வயது 29) கடந்த ஞாயிறன்று வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நண்பர்களுடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் தேனீர் பானம் அருத்தியுள்ளார்.
அதன் பிறகே மனைவிக்கு உணவும் எடுத்துக்கொண்டு அவர் அங்கிருந்து வீடு நோக்கி சென்றுள்ளார் . வீட்டின் அருகே சென்றுள்ள அவர் வீட்டின் பிரதான வாயிலை திறக்குமாறு மனைவிக்கு தொலைபேசியில் தனது காருக்குள் இருந்தவாறே அறிவித்துள்ளார்.
இதன்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்துள்ள மனைவி பிரதான வாயிலை திறந்துள்ளார். திறக்கும் போது, காரில் இருந்த தனது கணவரான கோடீஸ்வர வர்த்தகரை வேனொன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திக் கொண்டு செல்வதை தான் கண்டதாக மனைவி பம்பலபிட்டி பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இந்த விடயம் குறித்து விசாரணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல்தெனிய அகியோரின் மேற்பார்வையில் பம்பலபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை விட இது குறித்து சிறப்பு விசாரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸாவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரதிலக, மற்றும் அதன் பொறுப்பதிகாரி நெவில் டி சில்வா ஆகியோரின் கீழான சிறப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வர்த்தகரின் கைக்கடிகாரம் கடத்தல் இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்தில் போராடும் போது வர்த்தகருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து சிந்தியிருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க இரத்தக் கறைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இரத்தக் கறை தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர, கொலை செய்யப்பட்டுள்ள வர்த்தகர் சகீபின் தந்தையான மொஹம்மட் ஹபீப் ஈஸாவின் இரத்த மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்காக ஜீன் டெக் நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளது.
தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர, கொலை செய்யப்பட்டுள்ள வர்த்தகர் சகீபின் தந்தையான மொஹம்மட் ஹபீப் ஈஸாவின் இரத்த மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்காக ஜீன் டெக் நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளில் தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து வர்த்தகர் சகீப் குற்றப் புலனாய்வு பிரிவிலும் 45 மற்றும் 35 இலட்சம் ரூபா மோசடி செய்த்வர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்துள்ளமை தெரியவந்தது.
வர்த்தகருடன் தொலைபேசியில் தொடர்புகொன்டவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பம்பலபிட்டி பகுதியின் பல சீ.சி.ரி.வி. கமராக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு விசாரணைகள் தொடர்ந்த நிலையிலேயே நேற்று முன் தினம் இரவு சகீபின் சடலம் மாவனெல்லை – ஹெம்மாத்தகம பிரதான வீதியின் உக்குலேகம பள்ளத்தாக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களைத் தேடிய விசாரணைகள் தொடர்கின்றன. சகீபின் சடலமானது நேற்று பிற்பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு ஜனாஸா நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.