பொருட்கள், சேவைகளின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேச வற்வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு முரணான வகையில் காணப்படுவதாக உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
வற்வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருப்பதோடு அதனை இன்று சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
இதற்கமைய குறித்த திருத்தச் சட்டமூலம் ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு முரணாக அமைந்திருப்பதாக உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்திருப்பதாக சபாநாயகர் கூறினார்.
சபாநாயகரின் அறிவித்தலின் பின்னர் சபையில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த திருத்தச் சட்டமூலத்திற்குப் பதிலாக புதியதொரு சட்டமூலம் சபையில் சமர்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இவ்வாறான சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், அவை குறித்தும் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும் கட்சித் தலைவர்களது கூட்டத்தில் இதுபற்றி ஆராய்ந்து கலந்துரையாடி இறுதிமுடிவு எடுக்கப்படும் என்ற பதிலை சபாநாயகர் இதன்போது வழங்கினார்