
இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டுயுத்தத்தின் துஸ்பிரயோகங்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில் வலுவான சர்வதேச பிரசன்னம் காணப்படுவதை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அதன் ஜெனீவா இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டிய தருணம் வந்துவிட்டதை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகின்றது.சர்வதேச பங்களிப்புடனான நீதிபொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதிவழங்குவதற்கு சர்வதேசபங்களிப்பு அவசியம்என்ற முக்கியமான விடயத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதுடன்,இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு முக்கியமான வாக்குறுதிகளை வழங்கிவருகின்றது
எனினும் நேர்மையான நீதிசெயற்பாடுகளில் உள்நாட்டு அழுத்தங்களும்,அச்சுறுத்தல்களும் காணப்படுவதை உறுதிசெய்வதற்கு சர்வதேசபங்களிப்பும், கண்காணிப்பும் அவசியம்.
இலங்கையில் உடனடியாக முன்னெடுக்கவேண்டிய சீர்திருத்தங்களிற்கான உறுதியான வேண்டுகோளாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.
உத்தேச தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்படாத போதிலும், அனைத்து பரிந்துரைகளும் அமுல்படுத்தப்பட்டால் கடந்த கால சம்பவங்களுக்கு நீதி வழங்கக்கூடிய ஓர் நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையின் போது ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகள் பிரச்சினைகளை தவிர்க்க அர்த்தமுள்ள சர்வதேச பங்ளிப்பு, சர்வதேச கண்காணிப்புப் பொறிமுறைமை மிகவும்அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் உள்ளக அழுத்தங்கள் தலையீடுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாம் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாகவே காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்துசெய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.