வலையை கரை சேர்ப்பதற்காக சென்ற இரு மீனவர்கள் பரிதாபமாக மரணம்

174
(மன்னார் நகர் நிருபர்) 
கடந்த சில நாட்களாக தலைமன்னார் கடற்பகுதியில் வீசிய அதீத காற்று காரணமாக கடலில் பாய்ச்சப்பட்ட வலையை கரை சேர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு  சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த   சகோதரர்களான இரு மீனவர்கள்  5 நாட்களின் பின் இன்று புதன் கிழமை(13) மதியம் யாழ் புங்குடுத்தீவு கடற்;கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த வெள்ளிக் கிழமை (08) ஆம் திகதி தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும், தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக  படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
ஆனால் கடலுக்குச் சென்ற குறித்த இரு மீவர்களும் குறித்த நேரத்திற்கு கரை திரும்பாததினால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் பத்து படகுகளில் நாற்பது மீனவர்கள் கடலில் தேடுதலை மேற்கொண்டனர்.
ஆனாலும் குறித்த மீனவர்களை கண்டு  பிடிக்க முடியவில்லை.
இவர்களுடைய படகு இயந்திரம் பழுதடைந்திருந்தால் வட கடலிலே இவர்கள் தொழிலை மேற்கொண்டதால் இவர்கள் யாழ் பகுதி அல்லது இந்திய கடல் பக்கமே அடைந்திருக்க சாத்தியக் கூறுகள் இருப்பதால் குறித்த பக்கம்  நோக்கியும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு கடற்;கரையில் சகோதரர்களான குறித்த இரு மீனவர்களும் 5 நாட்களின் பின் இன்று  புதன் கிழமை (13) மதியம் சடலங்களாக  கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SHARE