வவுனியா, தர்மலிங்கம் வீதியில் உள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவர் திருவுருவச் சிலை முன்பாக ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆடிப்பிறப்பு நிகழ்வு தொடர்பாகவும், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடிய ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே’ என்ற பாடலை நினைவுபடுத்திய கருத்துரைகள் இடம்பெற்றதுடன் ஆடிக்கூழ் காய்ச்சப்பட்டு நிகழ்வில் வருகை தந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன், வவுனியா நகரசபை செயலாளர் க.சத்தியசீலன், கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியும் வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினரும் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவமோகன், கூட்டமைப்பு வேட்பாளர்களான செல்லத்துரை, றோய் ஜெயக்குமார், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.என்.ஜி.நாதன், நகர கிராம அலுவலர் ஜெகசோதிநாதன், வரியிறுப்பாளர் சங்க தலைவர் செ.சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.