வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தை உடைக்க நகரசபை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

640
வவுனியா சின்னக்குளத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை இடித்து அகற்றுவதற்கு வவுனியா நகரசபை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
குறித்த கிறிஸ்தவ தேவாலயமானது வவுனியா நகரிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள நிலையில் தேவாலயம் கட்டுமானப்பணிகளின் போது நகரசபையின் அனுமதியினை பெறவில்லை என தெரிவித்தே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எதிராக விதிமுறைகளை மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கருத்து தெரிவித்த குறித்த தேவாலயத்தின் தலைமை போதகர், தேவாலயத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக வவுனியா நகரசபையின் அனுமதி கோரலுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு சகல ஆவணங்களும் நகரசபைக்கு சமர்ப்பித்திருந்தோம். கடந்த எட்டு ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் இழுத்தடித்த நகரசபை திடீரென தேவாலயத்தை இடிப்பதற்கு நீதிமன்ற நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இவ் வழக்கு சம்பந்தமாக எமது சட்டத்தரணி ஊடாக அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளோம். வவுனியா நகரில்  400 அதிகமான கட்டிடங்கள் நகரசபையின் அனுமதி இன்றியே கட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரிலிருந்து நகரசபை எல்லையில் எவருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் அமைந்துள்ள எமது தேவாலயத்தை இடிக்க நகரசபை முயற்சி செய்வது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக நகரசபைக்கு எதிராக எமது சட்டத்தரணி எல்.ஜெஸ்ரீன் ஊடாக உயர்நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் நகரசபை நிர்வாகத்தின் மீது ஒரு முழுமையான விசாரணைய உள்ளுராட்சி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். எமது தேவாலயம் குறிவைக்கப்பட்டதானது அரசியல் ரீதியான நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதாக தெரிவித்தார்.
நகரசபையின் இச்செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் ஒருவர், வவுனியா நகரசபை மதுபான கடைகளை அமைக்க அனுமதி வழங்குகிறது. சினிமா நடிகர் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க அனுமதி வழங்குகிறது, வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான கட்டிடத்தை நேற்றைய தினம் பௌத்த பிக்குகளுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ள நிலையிலும், நகரிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க திராணியற்றிருக்கும் நகரசபை நிர்வாகம் ஆன்மீகஸ்தலங்களில் கைவைக்க நினைப்பது மத ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
SHARE