வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சிதம்பரபுரம் பகுதியில் குழுவாக கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் சிலரிடம் பணம் பெற்று தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது,
கடந்த வாரம் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 1 இல் குடும்பப் பெண்களுக்கு முன்பு நுண்நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுக்கொடுத்த ஊழியர் ஒருவர் ஒரு குழுவினர் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்தவில்லை என்று தெரிவித்து திரும்பவும் அவர்களுக்கு கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஊழியரின் வார்த்தையை நம்பி திரும்பவும் கடன் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்களிடம் ஆயிரம் ரூபா வீதம் 20 பேரிடம் பணம் பெற்றுவிட்டு தற்போது அவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் குறித்த ஊழியர் ஏமாற்றிவிட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்திற்குச் சென்று இவ்விடயம் தொடர்பாக முறையிடவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.