வவுனியாவில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு –

289
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் முழுநேர இயல்பு நிலை தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஆதரவு வழங்குவதாக அதன் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது. இந்நிலையில் தமது விடுதலைக்காக தாமே போராட வேண்டிய அவலநிலைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முழு நேர ஹர்த்தாலுக்கு எமது கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பொது அமைப்புக்களும் இணைந்து அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு எமது கட்சியும் தனது முழுமையான ஆதரவினை வழங்குகின்றது.

எனவே, அன்பான தமிழ் பேசும் உறவுகளே, சிறையில் வாடும் எமது உறவுகளின் விடுதலைக்காக அன்றைய தினம் தாங்களும் ஒரு கணம் சிந்தித்து ஒத்துழைப்பு வழங்கி இந்த முழுநேர ஹர்தால் மூலம் தமிழ் மக்களின் குரல்களை வலுவடையச் செய்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒன்றுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE