வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் இம்மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வியாபார நிலையங்களுக்கு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தமது குடும்பத்தினருடன் அன்றைய தினத்தைக் கழிப்பதற்கு வழிசமைத்துக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாரத்தில் ஒரு நாளை குடும்பத்தினருடன் முதலிடுவோம் என்ற தலைப்பில் உள்ள துண்டுப்பிரசுரத்தில், உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்த்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க ஒத்துழைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விஷேட பண்டிகை காலங்களில் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த தினங்கள் நாம் அனைவரும் கடுமையாக உழைப்பது எமது குடும்பத்தினருக்காகவே, எமக்கு அவர்களுடன் கலந்துரையாடி குழந்தைகளுடன் கூடி விளையாட போதிய நேரம் கிடைக்கின்றதா? இல்லை என்பதே பலரின் பதிலாக அமைந்துள்ளது.
வர்த்தக நிலைய உரிமையாளர்களாகிய நாம் அனைவரும் ஞாயிறு தினங்களை விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி எமது குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து இன்புற்றிருக்க அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களின் ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.