வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக விவசாய நிலங்களும்,பயிர்களும் நாசமாவதுடன் கிராம மக்களின் வீடுகளையும் தாக்கி அழித்து வருவதாக அம்மக்கள் கவலை வெளியிட்டனர்.
கடந்த யுத்தகாலத்தில் நித்தியநகர் கிராமத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்ட அம் மக்கள் உள்ளுரிலும், இந்தியவிற்கும் இடம்பெயர்ந்திருந்தனர். 2000 ஆம் ஆண்டுக்கு பின் தமது ஊரில் மீள்குடியேறிய அம்மக்கள் விவசாயத் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னரே தமது ஊரில் யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் அம்மக்கள் விசனம் வெளியிட்டனர்.
யானைகளின் தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிட்ட நித்திய நகர் கிராம மக்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கியம் என ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால் மற்றைய இடங்களுக்கு உதவி வழங்கப்படுவதை போல் விவசாயத்திற்கு எந்தவிதமான உதவிகளும் எங்கள் கிராமத்திற்கு வழங்கப்படுவதில்லை யானைத்தாக்குதலுக்கு அரசாங்கமோ அல்லது வேறு திணைக்களங்களோ எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை, மக்களை யானை விரட்டுகிற படியால் நடமாட முடியாத நிலமை காணப்படுகிறது. பிற்பகல் நான்கு மணிக்கே யானை ஊருக்குள் வந்துவிடுகிறது. யானையால் விளைவிக்கப்படும் சேதங்களை பாராளுமன்ற ஊறுப்பினர்கள் தொடக்கம் அரச அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்வதுடன் அவர்கள் கடமை முடிந்துவிடும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்குவார்கள் பாதிக்கப்பட்ட எங்கள் கிரமத்திற்கு நஸ்ட ஈடு எதுவும் வழங்கப்படுவதில்லை, நாங்கள் எங்களது கைக்குழந்தைகளுடன் இக்கிராமத்தில் வசித்து வருகிறோம் யானைகளின் தாக்குதல் அதிகரித்திருக்கும் நிலையில் எங்களால் இவ்வுரில் வாழ முடியாத நிலைமையே காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் எங்கள் ஊருக்கு மின்சார வேலி அமைத்து தரும்படி கோரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்தனர்.