வவுனியாவில் சமூக விரோதச் செயல்கள், ரவுடித் தனங்கள் தொடர்பில் உடன் அறிவிக்குமாறு வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புதிய தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளார்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக இளைஞர் குழுக்களுக்கிடையில் சண்டைகள், ரவுடித் தனங்கள் இடம்பெறுவதாக வவுனியா பிரதேச செயலக சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன் போது வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொலிசாரின் விசேட ரோந்து நடவடிக்கையை இடம்பெறவேண்டும் என பொது அமைப்புக்களால் கோரிக்கை விடப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த வவுனியா உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்குகெட்டி,
வவுனியா நகரசபைக்குட்பட்ட வைரவப்புளியங்குளம் மற்றும் குருமன்காடு போன்ற பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாலை 5.00 மணிக்கு பொலிஸ் ரோந்து போடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன்.
இது தவிர, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் உடன் கைது செய்யப்படுவார்கள்.
பொது மக்கள் சமூக விரோதச் செயல்கள் மற்றும் ரவுடித்தனங்கள் தொடர்பாக 024-2222226, 024-2222223, 024-2222224, 024-2222222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு உடனடியாக தெரிவிக்கும்படியும் கோரியுள்ளார்.