இலங்கை வங்கி ஊழியர்; சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று 09-12-2015 மதியம்
1.00 மணிக்கு கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிறுத்தம்
அருகில் வங்கி ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ‘கொன்று தின்னும்’; கொள்கையை தோற்கடிப்போம்
என்னும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை வங்கி
ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்; கடந்தகாலங்களில் இருந்த
அரசாங்கம் அரச நிறுவனங்களை விற்று வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ள
முயற்சித்தன. பிரதமர் அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த
பொருளாதார வழிமுறைகள் மற்றும் நிதியமைச்சர் சமர்ப்பித்த பாதீட்டு
தீர்மானங்களில் உள்ள அரச நிறுவனங்களை உள்நாட்டு உரிமையினையே கொன்று
தின்பதாகும். நீதியமைச்சர் குறிப்பிடுகின்றவாறு நல்லாட்சி
அரசாங்கத்தினால் இதற்கு முன்பில்லாதவாறு நவீனமயப்படுத்தப்பட்ட பாதீடு ஒன்று
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்
முயலுநர்களை முடக்கி, தங்கநகை ஆபரண அடகுகளை வரையறுத்தல், லீசிங் வணிகத்தினை
தடுத்தல், பணம் மீளப்பெறும் வரியினை அறிமுகப்படுத்தல், வருமான வரியினை
அதிகரித்தல் போன்றன உள்நாட்டு வங்கித்துறைக்கு எமனாகும் என அவ்வறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவில்குளம் நிருபர்