வவுனியாவில் நேற்றையதினம் பல வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாலை 7 மணியளவில் மதுபோதையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம், பெரியார்குளம் மற்றும் தோணிக்கல் பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை வவுனியா குற்றதடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஒரு வாள், கோடரி, கேபிள்கள் மற்றும் 3 மோட்டார்சைக்கிள்கள் என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை, மதீனா நகர் பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
அத்துடன், நேற்றைய தினம் மதுபோதை காரணமாக ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 7 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் குறித்த மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.