வவுனியாவில் அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த முப்பது குடும்பங்கைளச் சேர்ந்த 104பேர் இன்னமும் வெள்ள அகதிகளாக நலன்புரி முகாங்களில் தங்கி வருகின்றனர். அடைப்பழைட வசதிகளற்ற நிலையிலேயே இந்த மக்கள் வசிக்கின்றனர்.
அண்மைய மழை காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 389பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன் மூன்று வீடுகள் முழுமையாகவும் நாலு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தன. இவர்கள் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாவர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து 2010இல் இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்களுக்கு இதுவரையில் நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படாமையினால் இவர்கள் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மழை வெள்ளத்தின்போது இவர்கள் வசித்து வந்த தற்காலிக வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வவுனியா மாதர்பனிக்கர்குளம் மகிழங்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் தற்காலிக நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களின் கிராமத்தில் குடியேற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.