வவுனியா – தாலிக்குளம் பகுதியில் சுமார் முப்பது குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தாலிக்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இன்று காலை நடத்தப்பட்டது.
பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள தாலிக்குளம் கிராமத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற சுமார் முப்பது குடும்பங்களிற்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அங்கு வசிக்கும் உப குடும்பங்கள் பலவற்றிற்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்ற நிலையிலேயே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டு, உடமைகள் அனைத்தையும் இழந்து, அகதி வாழ்க்கை வாழ்ந்து, இங்கு குடியேறியுள்ளோம். இருப்பினும் தற்போது வரையிலும் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.
நாம் எமது சொந்த நிலங்களிலேயே அகதி போன்று வாழ வேண்டிய நிலை உள்ளதுடன், சமுர்த்திக் கொடுப்பனவுகள் எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை.
இதேவேளை, எமது கிராமத்திற்கான வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருப்பதுடன் குடிநீர்ப் பிரச்சினையையும் எதிர்நோக்கி வருகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், எமது கிராமத்தை அரச அதிகாரிகள் கைவிட்டு விட்டார்களா என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.