வவுனியா நகரசபையின் ‘எழு நீ’ விருது தொடர்பாக இதுவரை மெளனம் காத்து வந்திருந்தேன்-சிரேஸ்ட ஊடகவியளாலர் வெட்டு ஒன்று துண்டு இரண்டு

228

 

வவுனியா நகரசபையின் ‘எழு நீ’ விருது தொடர்பாக இதுவரை மெளனம் காத்து வந்திருந்தேன். ஏனெனில் ஒரு நகரசபை முடிந்ததைதான் செய்யும். அதிலும் ஒரு இளம் தவிசாளர் உள்ளார் அவரது முயற்சிக்கும் பயணத்திற்கும் தடை ஏற்படுத்த கூடாது என்பதற்காக.
எனினும் விருது தெரிவுக்குழுவில் உள்ள ஒருவர் ஊடகங்களை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வானது நகரசபை தலைவரின் விருப்பமா? அவரது அலுவலக அறைக்கு முன்பாக மக்கள் வரிப்பணத்தில் புதிய அறை அமைத்து ஏசி பூட்டி அடுகிடை படுகிடையாக உள்ள கட்சிக்காரர்களின் சிந்தனையா என்பது ஒருபுறமிருக்க,
இதன்பின்னரும் மெளனம் காத்தால் அது சாலச்சிறந்தது அன்று.

எனக்கும் விருதுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எனது துறையையும் எமது துறை சார்ந்தவர்களையும் விமர்சித்துள்ள இந்த குழுவிடம் மானமுள்ள ஒருவனாக விருதை பெறவேண்டுமா என்ற கேள்வி நிறைந்துள்ள நிலையில் இப்பதிவை இடுகின்றேன்.

நகரசபையினரே நீங்கள் நகரத்தில் பல்வேறு தேவைகளும்குறைபாடுகளும் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே பலரும் அதனை சுட்டிக்காட்டிய போதிலும் அதனை செய்ய முனைப்பு காட்டாது இந்த விருது வழங்குகின்ற நிகழ்வினை முன்னுரிமை கொடுத்து ஏற்பாடு செய்தது என்ன காரணத்திற்காக என்ற கேள்வி மக்களிடம் நிறையவே உள்ளது.
அதற்கு அப்பால் கலைஞர்களை கெளரவிக்கும் நீங்கள் இந்தக் கலைஞர்களுக்காக ஒரு பௌர்ணமி விழாவை கூட செய்து முடிக்க முடியாதவர்கள் செய்யத் துணியாதவர்கள் அவ்வாறின்றேல் ஒரு கலை விழாவை சாதாரணமாக செய்ய முடியாதவர்கள் இந்த கலைஞர்களுக்காக ஒரு மண்டபத்தை இலவசமாகவோ குறைந்த வாடகைக்கோ கொடுக்க முடியாதவர்கள் எதற்காக இந்த கலைஞர்கள் கௌரவிக்க முனைகின்றீர்கள்.

விருது தெரிவு முதல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு வரை இரகசியம் பேணும் நீங்கள் எந்த அடிப்படையில் இந்த விருதுக்கு தெரிவுசெய்துள்ளீர்கள் என கேட்டபோது இரகசியமானது என்றீர்கள்.

குறிப்பாக ஒருவர் இன்னொருவரை சிபாரிசு செய்யும் பட்சத்தில் அந்த சிபாரிசு செய்தவரிடம் அல்லது சிபாரிசு செய்யப்பட்டவரிடம் அவர் உண்மையாக அந்த துறையில் இருக்கின்றாரா அந்த துறையில் சாதித்து இருக்கிறாரா என்பதனை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது.

அதற்கும் அப்பால் ஒருவர் குறித்த துறையில் எதையாவது குறித்த துறைக்கோ சமூகத்திற்கோ சாதித்து இருக்கிறார் என்பதனை நீங்கள் கண்டு கொள்கின்ற அளவுக்கு நீங்கள் அனைத்து துறையிலும் அல்லது அவர்கள் தொடர்பாக எந்த அளவு தெளிவு பெற்று இருக்கிறீர்கள் அல்லது அவர்களிடமிருந்து ஏதேனும் ஆவணங்களை பெற்று உங்களுடைய குழு பரிசீலித்து அந்த விருதை கொடுத்துள்ளீர்களா என்பது தொடர்பில் கேள்வி எழுகின்றது.

இங்கே ஊடகங்களை விமர்சித்துள்ள் தெரிவுக் குழுவில் இருக்கும் நபர் எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தபோது இரண்டு கேள்விகளை கேட்டிருந்தேன்.
1. நகரசபையால் ஒரு பெளர்ணமி விழாவோ கலைஞர்களுக்கான களத்தினை அமைத்துக்கொடுக்கும் பணியை இதுவரை காலமும் செய்ய ஏன் முடியாமல் போனது.

2. நீங்கள் விருது கொடுப்பது எல்லோரும் சரியான அந்தந்த துறையில் அதற்காக பணியாற்றுபவர்களாகு கொடுக்கிறீர்களா?
என கேட்டேன்.
முதலாவது கேள்விக்கு நகரசபையிடம் கேளுங்கள் என்றும் இரண்டாவது கேள்விக்கு நாங்கள் சரியாகத்தான் செய்வோம் நீங்கள் விழாவுக்கு வந்து பாருங்கள் என்று சொல்லி இருந்தார்.

ஆகவே நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு அதற்கு சிறந்த பதிலைத் தராமல் நாங்கள் செய்தியை வெளியிட முடியாது.

அவ்வாறு கருத்து தெரிவிக்காத நீங்களும் உங்கள் கறுப்பறையில் கட்சி நடத்தும் தெரிவுக்குழுவும் நீங்களாகவாவது ஊடக வெளியீடொன்றையோ ஒரு ஊடகவியலாளர் சந்திப்பையோ நடத்த திராணியற்றவர்களாக இருந்து கொண்டு உங்களிடம் வந்து கேட்கவில்லை சொல்லவில்லை என்கின்றீர்கள்.
நீங்கள் எந்த அடிப்படையில் செய்கின்றீர்கள் என்பதை எல்லாம் ரகசியமாக வைத்துக் கொண்டு எதையும் வெளியில் விடமாட்டோம் என்கின்றபோது மக்களிடம் அதிக விமர்சனத்துக்குள்ளாகியுள்ள உங்களிடம் செய்தியை எடுத்து அதை பிரசுரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அவ்வாறுதான் ஊடகத்தை நேசிப்பவர்களுக்கும் இருக்கும் என கருதுகின்றேன்.

வேண்டுமாக இருந்தால் நீங்கள் ரகசியமாக தெரிவு செய்த விருதை கொடுங்கள். உங்களுக்கு சார்பானவர்களுக்கும் என்ன கேவலம் நடந்தாலும் தனது துறைக்கே கேவலம் வந்தாலும் நக்கிப்பிழைத்தாவது விருதை வாங்குவேன் என்பவர்களுக்கு கொடுத்தீர்களா என்பதை நிகழ்வு நடந்தது பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
அதற்கும் அப்பால் வெறுமனே ஊடகவியலாளர்களை விமர்சிப்பதோ அல்லது பிழையாக செய்துவிட்டார்கள் என்று நீங்கள் விமர்சிக்கும் முன் உங்கள் மீதும் கறுப்பறையில் களியாட்டம் போடும் கட்சிக்காரர்கள் பற்றியும் ஊரில் கதைப்பதையும் செவிமடுங்கள்.

இதற்குப் பின்னரும் நீங்கள் 125 பேருக்கு வழங்குவதாக இருந்த விருதை 140 பேராக்கியுள்ளதையும் நீங்கள் எந்த மன்றத்தின் மேற்சபை உறுப்பினர் என்று கூறுகின்றீர்களோ அதில் இருந்து நீங்கள் வலுவிழக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் அடிப்படை உறுப்புறுமையுடன் உள்ள நிலையில் குறித்த மன்றத்தினால் அவர்கள் சார்பில் உங்களை அனுப்பாத போதிலும் அந்த மன்றத்தினை பிரதிபலித்து செல்வதும் எந்த வகையில் நியாயமானது போலித்தனம் என்பது தொடர்பிலும் சிந்தியுங்கள்.

தொடரும் …….
இனி நகரசபை மற்றும் ஆலோசகர்கள் தொடர்பாக.

SHARE