‘பொருளாதார மத்திய நிலையம்’ – ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடும் வாய்த் தர்க்கங்கள்!
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் ஓமந்தையில் அமைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இணைத் தலைவர்களில் ஒருவரான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற மற்றும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்.
இரு வாரங்களுக்குள் ஓமந்தையில் அமைப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாண்டிக் குளம் காணியை வழங்க வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளோம்.
இது தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக ஆகியோருக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கங்கள் இடம்பெற்றன.
இறுதியில் குறித்த விடயத்தை எழுத்து மூலம் தருமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரினார்.
தனக்கு தனிப்பட்ட ரீதியில் மதவுவைத்த குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்த பின் மாற்ற உடன்பாடு இல்லை எனவும் தாங்கள் எல்லோரும் எழுத்து மூலம் தந்தால் தான் அதனை ஏற்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் எனவும் இரு வாரங்களுக்குள் அதற்கு உரிய வேலை ஓமந்தையில் தொடங்கப்படா விட்டால் தாண்டிக்குளம் காணியை வழங்குவது எனவும் கடிதம் மூலம் வழங்கினர்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக பதில் முதலமைச்சர் குருகுலராஜா தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து சபையில் அமைதி நிலவியது