கான்பூரில் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க தனது 5 மாத குழந்தையை விற்ற பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேசம் கான்பூர் அருகேயுள்ள பபுபுர்வா என்ற பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் காலித்(40). இவர் சில வருடங்களுக்கு முன்பு சாயிதா என்ற பெண்ணை திருமனம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வட்டிக்கு கொடுப்பவர் ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கமாக கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கொடுக்கும் திகதி முடிந்த நிலையில் கடன் கொடுத்தவர் தினமும் பணத்தை திருப்பி தருமாறு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று புரியாமல் பிறந்து ஐந்து மாதங்களேயான பச்சிளம் குழந்தையை விற்று ரூ. 1.6 லட்சம் பெற்றுள்ளனர்.
மேலும், குழந்தை விற்ற விடயம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக குழந்தை காணவில்லை என பொலிசில் பொய்யான புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அளித்த அந்த பொய்யான புகாரே அவர்களுக்கு சிக்கலாக அமைந்தது. புகாரைப் பெற்ற பொலிசார் குழந்தையை தேடி வர ஜகர்கட்டி பஸ் நிலையத்தில், குழந்தையுடன் நின்றிருந்த பைசானை கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பைசானிடம் மேற்கொண்ட விசாரணையில், காலித்தும், சயீதாவும் சேர்ந்து ரூ.1.6 லட்சத்திற்கு குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தம்பதி இருவரையும் கைது செய்த பொலிசார், அவர்கள் வீட்டிலிருந்து ரூ.60 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.