வாசிம் தாஜூடீனின் படுகொலை கப்டன் திசா என்ற நபர் கண்காணிக்கப் படுகிறார்

301

ரக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கப்டன் திசா என்ற நபரை கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்டன் திசா முன்னாள் ஜனாதிபதியின் வாகனசாரதியாக பணியாற்றியவர். குறிப்பிட்ட கொலை தொடர்பாக பொலிஸாரிற்கு சாட்சியமளித்த பலர் கப்டன் திசாவின் சாயலில் உள்ள நபர் ஓருவரை சம்பவம் நடநத இடத்தில் பார்த்ததை உறுதி செய்துள்ளனர். ரக்பி வீரரின் வாகனம் தீப்பிடித்த அந்தவேளையில் அதற்கு அருகில் இரு டிபென்டர் ரகவாகனங்களை பார்த்ததாக  கண்ணால் கண்டபல சாட்சிகள் பொலிஸாரிற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
டிபென்டர் வாகனத்தில் வந்த சிலர் ரக்பிவீரரின் கார் எந்தநேரத்திலும் வெடித்துச்சிதறலாம் என தெரிவித்து தங்களை அந்த காரிற்கு அருகில் செல்லவிடாமல் தடுத்ததாக சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அவ்வேளை நின்றிருந்த மக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தாஜூடீனை காப்பாற்றுவதற்கு தாங்கள் இறுதிநேரத்தில் மேற்கொண்ட முயற்சிகளை அவர்கள் தடுத்ததாகவும் பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதேவேளை கிருலப்பனை சந்தியில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி கமரா வீடியோவொன்றில் ரக்பி வீரரின் வாகனத்தினை போன்ற ஓன்றை டிபென்டர் ரக வாகனங்கள் சில பின் தொடர்வது பதிவாகியுள்ளது. தாஜூடீனின் வாகனம் தன்னை பின்தொடர்பவர்களின் வாகனத்தை தவிர்க்க முயல்வதும், எனினும் டிபென்டர் ரக வாகனங்கள் அவர் தப்பிச் செல்வதற்கான வழிகளை தடுப்பதும் அந்த வீடியோ மூலம் தெளிவாகியுள்ளது.
இது ரக்பிவீரர் தனது உயிரிற்கு ஆபத்துள்ளதை உணர்ந்திருந்தார், என்பதை புலப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவரின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த பதிவுகள் சந்தேகநபர்களை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றப்போகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE