வாட்டும் வறுமையால் ஆடு மேய்க்கும் எம்பிபிஎஸ் மாணவி படிக்க வசதியின்றி தவிப்பு

240

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும், படிக்க வசதியில்லாததால் திருச்சி மாணவி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலக்குழுமணியை சேர்ந்த முத்துவீரன்-மலர்கொடி தம்பதியரின் மூத்த மகள் பிருந்தாதேவி. இவர் குழுமணி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் 486 மார்க் எடுத்தார்.

அதிக மதிப்பெண் எடுத்ததை பார்த்த ஆசிரியர்கள், பிருந்தாதேவியை பிளஸ் 2 படிக்க நாமக்கல் மாவட்டம், வினாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். முத்துவீரன் சரிவர குடும்பத்தை கவனிக்காததால், மலர்கொடி தான் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார். அவரது வருமானம் குடும்பச் செலவுக்கே சரியாக இருக்கும்போது, பிருந்தாதேவியின் படிப்புக்கு அவரால் செலவு செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஊர் மக்களும், ஆசிரியர்களும் பிருந்தாதேவியின் படிப்புக்கு உதவினர்.

பிருந்தாதேவி பிளஸ் 2 தேர்வில் தமிழ் 189, ஆங்கிலம் 178, கணிதம் 197, இயற்பியல் 189, வேதியியல் 198, உயிரியல் 191 என மொத்தம் 1,142 மதிப்பெண்கள் எடுத்தார். மேலும் மெடிக்கல் கட்-ஆப் 192.25 எடுத்தார். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைத்தது. கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள ரூ.10,500 மற்றும் விடுதி கட்டணம் உள்பட ரூ.9,000, இதர கட்டணம் ரூ.2,000 என ரூ.21,500 கிராம மக்களும், ஆசிரியர்களும் கொடுத்து உதவி உள்ளனர்.

ஆனால், மேற்கொண்டு 5 ஆண்டுகள் மருத்துவம் படிக்க ஆகும் செலவை நினைத்து பிருந்தாதேவியும் அவரது குடும்பத்தாரும் கவலையில் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் தான் கல்லூரி என்பதால், வீட்டிலிருக்கும் பிருந்தாதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவரது தாய் மலர்கொடி கூறுகையில், ‘கிராம மக்களும், ஆசிரியர்களும் தான் பிருந்தா 12ம் வகுப்பு படிக்கவும், மருத்துவக்கல்லூரியில் சேர பொருளுதவி செய்தனர். ஆனால் 5 ஆண்டுகள் படிப்பை தொடர எங்களிடம் வசதியில்லை என்று கவலையுடன் தெரிவித்தார்.
Daily_News_2731701135636

SHARE