விகாரையில் மீண்டும் இணைந்த மகிந்த, கோத்தபாய, பசில்!

280
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணி ஒன்று உருவாகிவருவதாக தெரியவந்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மூலம் மீண்டும் இழந்து போன தமது அரசியல் செல்வாக்கை பெருக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் அதிதீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்சவும் தற்பொழுது மகிந்த ராஜபக்சவோடு கைகோர்த்துள்ளனர். இவர்களோடு அத்தாவுல்ல செனவிரத்னவும் இணைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திக் குழுவினை உருவாக்குவதற்காக தற்பொழுது மைத்திரி ஆட்சியின் மீது அதிருப்தி கொண்டுள்ளவர்களை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதுவொருபுறமிருக்க, பௌத்த பிக்குகளின் ஆதரவைப் பெறும் நோக்கில் விகாரைகளுக்கு மகிந்த ராஜபக்ச அடிக்கடி வழிபாடுகளுக்கு சென்று வருவதாகவும், மகன் நாமல் ராஜபக்சவும் இதில் இணைந்து கொண்டுள்ளார்.

முன்னதாக தேர்தல் தோல்விக்குப் பின்னர் அமைதி காத்து வந்த முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தன்னுடைய செல்வாக்குகள் தற்பொழுது சரிந்து வருவதை உணர்ந்துள்ள நிலையிலும், தனது சகோதரர்களினதும், பிள்ளைகளினதும் அரசியல் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டும் மீண்டும் அரசியல் ஆடுகளத்தில் இறங்கியுள்ளார் என கொழும்பு அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE