விரைவில் மாகாணசபைத் தேர்தல் இடம்பெறவுள்ளதால் சம்பந்தனும், விக்னேஸ்வர னும் சந்தித்துப்பேசி தமிழ் மக்களுக்கு நன்மை யளிக்கத் தக்க நல்லதொரு முடிவைக்காண வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையினர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாகத் தெரியவருகின்றது.
முதலமைச்சர் பதவிக்கு வந்ததில் இருந்து விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றார். அவர் பதவிக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்கள் எதிலும் கூட்டமைப்புக்கு ஆதரவான பரப்புரை களில் பங்கேற்காது தவிர்த்துக் கொண்டார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது கூட்டமைப்புக்கு எதிரானவர்களுடன் தொடர்புகளை அவர் பேணி வந்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வௌியானபோது தமிழரசுக் கட்சியை ஏளனம் செய்வதற்கும் அவர் தவறவில்லை.
தற்போது தாம் புதிய கட்சியொன்றை உருவாக்கப் போவதாகவும், அது சாத்தியப்படாதுவிட்டால், கூட்டணி அமைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளமை கவனத்துக்கு உரியது.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்டபாளராக சம்பந்தனால் நிறுத்தப்பட்டவர் இந்த விக்னேஸ்வரன். ஆனால் பதவிக்கு வந்ததன் பின்னர், சம்பந்தனையோ அவரது கருத்து க் களையோ மதிப்பதற்கு அவர் தவறிவிட்டார்.
அமைப்புக்கு எதிரானவர்களுடன் கூட்டுச் சேர்வதையும் அவர் பெருவிருப்பமாகக் கொண்டு செயற்படுவதையும் காணமுடிகின்றது. அவர் தம்மையொரு வலிமை படைத்த சக்தியாக எண்ணிக் கொண்டிருப்பதால், கூட்டமைப்பை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
இந்த நிலையில் சம்பந்தனும், விக்னேஸ்வரனும் சந்தித்துப் பேசவேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளமை அர்த்தமில்லாத ஒன்றாகவே தெரிகின்றது.
தற்போது சம்பந்தனும் விக்னேஸ்வரனும் சந்தித்துப் பேசவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள வர்கள், கடந்த காலங்களில் விக்னேஸ்வரனுக்கு அறிவுரை கூறாமல் இருந்தது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் அண்மையில் தெரிவித்த கருத்தொன்று கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமது கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்ததாகவும், மாற்றுத் தலைமைக்கான அத்திபாரம் இதன் மூலமாக இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், விக்னேஸ்வரன் தனிக்கட்சியொன்றை அமைத்தால், அவருடன் கூட்டுச்சேர்ந்து இயங்குவதில் தமக்குச் சிரமமெதுவும் இருக்காதெனவும், தெரிவித்துள்ளார்.
ஆனால் விக்னேஸ்வரனை மாற்றுத் தலைவராக ஏற்றுக்கொள்வது தொடர்பாக அவர் எதையும் கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அத்துடன் விக்னேஸ்வரனும் இன்னுமொரு தலைமையின் கீழ் செயற்படுவதற்கு விரும்புவாரா என்பதும் சந்தேகத்துக்கு இடமானதே.
வடக்கு மாகாண சபையின் கூட்டமைப்புச் சார்பான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தாமே என மாவை தெரிவிப்பு
கூட்டமைப்பில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் உள்ள மாவை சேனாதிராசா, அடுத்த வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தாமேயென அறிவித்துவிட்டார். இவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பது சம்பந்தனுக்கு இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.
இதேவேளை விக்னேஸ்வரன் கூட்டமைப்புக் குச் சவாலாக மாற்று அணியொன்றை அமைக்கும் முயற்சிகளை ஆரம்பித்துவிட்டதாகவும், அதனைச் சம்பந்தன் ஊடாகத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும் இறங்கியுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தனின் பேச்சை விக்னேஸ்வரன் செவிமடுப்பாரா என்பது ஒருபுறமிருக்க, அவரிடம் கூட்டமைப்பு சரணாகதி அடைவதைக் கூட்டமைப்பின் தொண்டர்கள் விரும்புவார்களா? என்பதையும் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கூட்டமைப்பு சோதனையானதொரு காலகட்டத்தைத் தற்போது தாண்டிக்கொண்டிருக்கிறது.
விக்னேஸ்வரன் இதைச் சீர்செய்வதற்குப் பதிலாக மேன்மேலும் பிரச்சினை களை ஏற்படுத்துவதிலேயே தீவிரமாக உள்ளார். தாமொரு தலைவராக உருவாக வேண்டுமென்பதே இவரது நீண்டநாள் அபிலாசையாகவும் காணப்படுகின்றது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது கடும் அதிருப்தி கொண்டுள்ள கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்
விக்னேஸ்வரனின் கடந்தகாலச் செயற்பாடுகளால் வெறுத்துப்போன கூட்டமைப்புத் தொண்டர்கள், அவர் கூட்டமைப்பிலிருந்து ஒதுங்கி நிற்பதைத் தான் பெரிதும் விரும்புகின்றனர்.
மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுமாயின், எவருக்குமே அறுதிப் பெரும்பான்மைகிடைக்காதெனவும் கூறப்படுகின்றது. ஈபிடிபியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவும் போட்டியில் குதிக்க விருப்பதால், பல்முனைப்போட்டி ஒன்றே வடக்கில் இடம்பெறப் போகின்றது.
உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட நிலையொன்று மாகாணசபைத் தேர்தலில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவு।மில்லை.
ஆகவே கூட்டமைப்பினர் புதிய வியூகங்களை வகுத்து வாக்காளர்களைக் கவருவதற்கான செயற்திட்டங்களில் இறங்க வேண்டும்.
விக்னேஸ்வரன் விடயமும், சம்பந்தனால் சாமர்த்தியமாகச் சமாளிக்கப்பட வேண்டும். ஓர் இனவாதியாகத் தெற்கில் பார்க்கப்படுகின்ற அவர், இங்குள்ளவர்களிடம் தீவிரமான இனப்பற்றாளாராகத் தம்மைக் காட்டிக் கொள்கின்றார்.
இவரது உண்மையான முகத்தை வௌிப்படுத்துவது சம்பந்தனின் முக்கிய பணியாகும்.