அஸ்வின், ஜடேஜாவின் மாயாஜால சுழலில் இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மாயஜால சுழற்பந்துவீச்சு
ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது.
தொடக்கத்திலே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
குறிப்பாக, ஜோ ரூட்டின் விக்கெட்டுக்கு பின் அடுத்தடுத்து இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சரிந்தன.
ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டம்
அக்சர் படேலும் ஒருபுறம் சுழற்பந்து வீச்சில் மிரட்ட, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) மட்டும் அணியை மீட்க போராடினார்.
அதிரடியாக ஆடிய அவர் 44 ஓட்டங்களில் இருந்தபோது, ஜடேஜா ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதத்தினை எட்டினார். இது அவருக்கு 31வது அரைசதம் ஆகும்.
இங்கிலாந்து ஆல்அவுட்
அதன் பின்னரும் சிக்ஸர், பவுண்டரி என விளாசிய ஸ்டோக்ஸ் கடைசி விக்கெட்டாக பும்ரா ஓவரில் போல்டு ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.