விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள்

244

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே, கொழும்புடன் இணக்க அரசியல் நடத்தி வந்த ஈ.பி.டி.பி.யும், அங்குமிங்குமாக நின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் இம்முறை தனித்து போட்டியிடுகின்றன.

இன்னொரு பக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. போன்ற தேசியக் கட்சிகளும் வடக்கு தேர்தல் களத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரை காலமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே, பேசப்பட்டு வந்த தமிழ்த் தேசியவாதத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. வேட்பாளர்களும் பேசுகின்ற நிலையைக் காண முடிகிறது. மொத்தத்தில் இம்முறை தேர்தல், சிக்கலான ஒரு களத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாக பாராளுமன்றத்தில் மாற்றியமைக்கத் திட்டமிட்டிருந்தாலும், அதற்கு வடக்குத் தேர்தல் களம் சவாலான ஒன்றாகவே இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான சவால்கள் இருப்பது வெளிப்படையான விடயம்.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு, ஒரு இலட்சத்து 32 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடு தொடர்பான கேள்விகள் நீடித்து வந்திருந்தன.

அதற்குக் காரணம், தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அவர், அமெரிக்க, பிரித்தானிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

அதை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னரும், அவர் யாழ்ப்பாணம் திரும்பாமல், கொழும்பிலேயே தங்கியிருந்தார்.

உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் கொழும்பில் தங்கியிருந்தாலும், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்கே அவர் கொழும்பில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, திருகோணமலையில் நடத்திய முதலாவது பிரசாரக் கூட்டத்திலோ, கடந்த ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் மருதனார்மடத்தில் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்விலோ, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருக்கவில்லை.

இது கூட்டமைப்புக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பத் தவறவில்லை. இந்தநிலையில் தான், கடந்த புதன்கிழமை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.

அது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கையாக அமைந்திருந்தது. அதில் அவர் தாம் இந்த தேர்தலில் பக்கச்சார்பின்றிச் செயற்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராக தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பினும், அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச்சார்பாக இறங்கி அக்கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரித்துப் பேசுவது தனக்கழகல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன் “நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.

எனவே திறமையான, மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடக் கூடிய, விலைபோகாதவர்களை தெரிவு செய்யுங்கள்” என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், வடக்கு மாகாண முதலமைச்சர் மீது மக்களுக்கு இருக்கின்ற மதிப்பும் நம்பிக்கையும், அவர் பிரசாரத்தில் ஈடுபட்டால் கூட்டமைப்புக்கு கூடுதல் சாதகமாக அமையும் என்ற கருத்து அவர்களிடத்தில் இருந்திருக்கும்.
ஆனால், அவர் நடுநிலை வகிக்க எடுத்துள்ள முடிவும், யாருக்காகவும் பிரசாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்ற நிலைப்பாடும், இவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த முடிவையும் அறிக்கையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்யும் சக்திகள், குறிப்பாக, தமிழ்த் தேசிய முன்னணி போன்றன சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஏற்கனவே, வடக்கு மாகாண முதலமைச்சரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது பக்கம் இழுக்க முயன்றது- அவரது அண்மைய வெளிநாட்டுப் பயணங்களின் போதும், அதற்கான முயற்சிகள் புலம்பெயர் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிடிகொடுக்காமல் நழுவியிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இப்போது, அவர் நடுநிலை வகிக்கப் போவதாக எடுத்த முடிவு என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடுநிலை வகிப்பதற்கா – அல்லது ஒட்டுமொத்த தேர்தலிலும் நடுநிலை வகிப்பதற்கா என்பதில் ஒரு மயக்கம் உள்ளது.

இது ஏற்படக் காரணம், அவரது அறிக்கையில், “கூட்டமைப்பினரால் வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013 ஆம் ஆண்டில் பொதுவேட்பாளராக நான் நிறுத்தப்பட்டேன்.

நான் பதவிக்கு வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பல நான் பக்கச் சார்பற்று நடுநிலை வகிக்கவில்லையே என்று என் மீது குறைபட்டுக் கொண்டனர்.

நான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக என்னை விமர்சித்தனர்.

முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற முறையில் பக்கச்சார்பற்று நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், அவர் தமிழரசுக் கட்சியின் சார்பாக செயற்படுவதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டிய சம்பவத்தையே சுட்டி நிற்கிறது.

அதேவேளை, இதே அறிக்கையில், அவர் சட்டக்கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ஏற்பட்ட நிலையையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து பக்கசார்பின்றி செயற்பட்டதை குறிப்பிட்டு, அதே முடிவையே தற்போதும் எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

இது வேறுவிதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவரது ஆதரவு இருக்கிறதா இல்லையா – வேறு கட்சியின் பொருத்தமான வேட்பாளர்களையும் தெரிவு செய்யுமாறு அவர் மக்களைக் கோருகிறாரா என்ற மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நடுநிலை எத்தகையது என்பதை இந்த அறிக்கையில் வெளிப்படுத்த தவறியிருக்கிறார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த விமர்சனங்களும், முரண்பாடுகளுமே முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருந்தால், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் கூட்டமைப்பின் தலைவர்களே.

அதேவேளை, லண்டனில் நடந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கருத்து முரண்பாடுகளை உயர்ந்த நிலை ஜனநாயகமாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதனைச் சார்ந்து இந்த முடிவை எடுத்திருப்பார் என்றால், அது அவரது முரண்நிலையை வெளிப்படுத்தும்.

இன்னொரு பக்கத்தில், அவர் இந்த முடிவை எடுப்பதற்கு இலங்கைக்கு வெளியே உள்ள சக்திகள் கொடுத்த அழுத்தம் அல்லது ஏற்படுத்திய அச்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மீது அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

அவ்வாறான நிலையில், தனது பெயரும் கெட்டுப்போய் விடும் என்ற அச்சமும் கூட அவருக்குள் தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன அல்லது அவ்வாறான கருத்து அவருக்குள் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீது புலம்பெயர் தமிழர்கள் இப்போது கூடுதல் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், அவர் புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முன்னரே, வடக்கு மாகாண மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.

இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னரே, புலம்பெயர் தேசங்களில் அவர் மீதான விமர்சனங்கள் குறைந்திருக்கின்றன.

அதற்கு முன்னர், அந்த தீர்மானத்தை இழுத்தடிப்பதாக விமர்சித்தவர்கள் இப்போது அவரை தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த தேர்தலில் நடுநிலை வகிக்க எடுத்துள்ள தீர்மானம், அவரது தனிப்பட்ட முடிவு.

அதுபோலவே, தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் மக்களுக்கேயுரியது.

இந்தக் காரணங்களுக்கு அப்பால் அவர் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்திருந்தால், அது அவர் மீதான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைப்பதாகவே இருக்கும்.

விருப்பு வாக்கு மோதல்களுக்குள்- கட்சிசார் அரசியலுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது என்பதே பலரதும் பொதுவான கருத்தாக உள்ளது.

ஏனென்றால், அந்தக் கூட்டமைப்பு தான், அவரை நீதித்துறை மாண்பில் இருந்து, மக்களாட்சியின் மாண்புக்குரிய ஒருவராக கொண்டு வந்து நிறுத்தியது.

கண்ணன்

SHARE