தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைத்துவமே இன்றையகால கட்டத்தின் தேவையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அதற்கான சரியான களம் அமைந்துள்ள நிலையில், விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டனி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“மாற்றுத் தலைமையுடன் இணைந்து செயற்பட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தயாராகவே உள்ளது. அதேபோல் தமிழ் மக்கள் பேரவையும் புதிய கூட்டணியுடன் இணைந்து பயணிக்கும்.
எமது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வடக்கு கிழக்கில் பலமான தமிழர் கட்சியினை உருவாக்குவோம்.
மேலும் அவர் முன்வைத்த கொள்கைகள், கூற்றுகள் என அனைத்துமே தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடாக உள்ளன. இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையில் சுயாட்சி கொள்கையை அவர் ஆழமாக வலியுறுத்தியுள்ளார்.
இதுவே எமதும் ஒரே நோக்கமாகும். அவ்வாறான நிலையில் விக்னேஸ்வரனுடன் இணைந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக அமையும் என நாம் நினைக்கின்றோம்.
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளமையை நாம் வாழ்த்துவதுடன் வரவேற்கின்றோம்.
இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களுக்கான சரியான தலைமை ஒன்று இல்லாத நிலையில் மாற்று தலைமைத்துவம் ஒன்றினை தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளதை ஆரோக்கியமான ஒன்றாகவே நாம் கருதுகின்றோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.