‘விசுவாசம்’ படத்தில் நயன்தாரா டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
அஜித்தை வைத்து சிவா நான்காவது முறையாக இயக்கிவரும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக அஜித்துடன் நடிக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தில் அவர் டாக்டராக நடிக்கிறார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, ரூபன் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கடந்த மே மாதம் 7-ம் தேதி இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகளைப் படமாக்கிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது ஷெட்யூல் அங்கேயே தொடங்கியுள்ளது.
மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களம் என்றாலும், அங்கு படமாக்கும்போது கூட்டம் சேர்ந்துவிடும் என்பதால், செட் போட்டு ஹைதராபாத்திலேயே முழுப்படத்தையும் எடுக்க இருக்கின்றனர். அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.