இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 4.8 கோடி ரூபா (48,563929.06 ரூபா) பணத்தை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி நிரந்தர விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்ட மா அதிபரால், பிரதம நீதியரசரின் ஒப்புதலுடன் நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கு தொடர்பில் ஆராய்ந்தே இந்த அழைப்பாணை அறிவித்தலை விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் நந்தசேன கோத்தபாய ராஜபக் ஷ,
லியன ஆரச்சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா, கமஎத்தி ராலலாகே சந்ரா உதுலாவத்தி கமலதாஸ, சுதம்மிக கேமிந்த ஆட்டிகல, சமன்குமார அப்ரஹாம் கலப்பத்தி, மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய, மதம்பெரும ஆரச்சிலாகே ஸ்ரீமத்தி மல்லிகா குமாரி சேனாதீர ஆகிய 7 பேரையுமே இவ்வாறு செப்டெம்பர் 10ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தல், விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோரால் பிறப்பிக்கப்பட்டது.