கடந்த 2002ம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் உலக அழகி ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர் ஹாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார். தற்போது வரை அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் அவரை சிறுவர்களின் வளர்ச்சிக்கான நல்லெண்ண தூதுவராக ஐ.நா அமைப்பு நியமித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உருவாக்கப்பட்ட 70வது ஆண்டுவிழா நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின்போது, பிரியங்கா சோப்ராவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்ட தகவலை பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் மற்றும் 12 வயது பிரிட்டன் நடிகை மில்லி பாபி பிரவுன் ஆகியோர் வெளியிட்டனர். இதில் ஜாக்கி சானும் கலந்து கொண்டார்.