விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இலங்கை ராணுவத்தினர் அடித்து கொன்றதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இப்புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது, எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போது, உயிரோடு இருக்கும் ஒருவர், கொலை செய்யப்படுவது உறுதியாகிறது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மிகக் கொடூரமான இறுதி கட்டப் போர் நடந்தது. முல்லைத்தீவு மாவட்டமே சூறையாடப்பட்டது. சுமார் ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போரின் உச்சக்கட்ட தாக்குதல் மே 17, 18 ந் தேதிகளில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்தது.
அந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கனடா, ஜெர்மனி, டென்மார்க், நார்வே, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஆலந்து உள்பட ஈழத்தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் மே 17, 18 ந் தேதியை போர் குற்றவியல் நாளாக அறிவிக்கக் கோரி கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு மே 17, 18ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிலும் அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிலையில் உயிரோடு இருக்கும் ஒருவரை, கொலை செய்யப்பட்டு அவர் மீது விடுதலைப்புலிகள் கொடி போடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.