விடுதலைப் புலிகளிடம் உதவி கோரிய ஸ்ரீ லங்கா அரசாங்கம்: இந்த சம்பவம் நினைவிருக்கிறதா?
சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இன நல்லிணக்க முயற்சிகள் உண்டா? என்று அண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருந்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலாகி சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்ததிலிருந்தே விடுதலைப் புலிகள் தமது நல்லென்ண முயற்சிகளை அவ்வப்போது அரசாங்கத்திடம் காட்டி வந்தமையை சர்வதேசமும் நன்கு அறியும். அதற்கு பல சம்பவங்கள் ஆதாரமாக பதிவாகியிருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் தென்னிலங்கையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைப் புலிகளின் உதவி.
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வெள்ள நிவாரண உதவி கேட்டிருந்தது. இந்த விடயம் இன்று பலரும் மறந்திருப்பர். உண்மையிலேயே இது நடந்தது 2003ஆம் ஆண்டு மே மாதத்தில்தான்.
வரலாறு கண்டிராத பேய் மழை பொழிந்து மனிதப் பேரவலம் நிலையை ஸ்ரீ லங்காவின் மலையகம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்படுத்தியிருந்தது. அப்போதைய வானிலைத் தரவுகளின்படி Ganapenigola Iranganie Estate எனும் இடத்தில் 899mm மழை வீழ்ச்சி பதிவாகியது. எட்டு இலட்சம் மக்களை இடம்பெயர வைத்த இந்த பேரனர்த்தம் 260 மக்களின் உயிர்களைக் காவுவாங்கியது.
இன்றைய நிலமையை விட அன்று ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் மூடப்பட்டன. 2003 may 17, 18 ஆகிய தினங்களிலேயே இது நிகழ்ந்தது.
அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிகா சனாதிபதியாக இருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது. (இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன சனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் பிரதமராக இருப்பதுவும் வேறு கதை) விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலம் அது.
உலகளவில் மிகப்பெரிய அனர்த்தமாக கருதப்பட்டு பல நாடுகள் உதவ முன்வந்தன. இந்தியா தனது கடலோர பாதுகாப்புப் படையை நேரடியாகவே மீட்புப் பணிகளுக்கு அனுப்பியிருந்தது. இந்திய கடற்படையின் சுழியோடிகள் சில நாட்களாக தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பாளராக இப்போதைய சபாநாயகரும் அப்போதைய அமைச்சருமான கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில்தான் விடுதலைப்புலிகள் இந்த மக்களுக்கு உதவும் பொருட்டு வெள்ள நிவாரணக் குழு ஒன்றை நியமித்தார்கள். அதன்படி வடக்கு கிழக்கில் அவர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த தமிழ் மக்களிடம் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவியினைக் கோரியிருந்தார்கள். இதன்படி பத்து பாரவூர்திகள் நிரம்பிய அரிசி மூட்டைகளும் ஆடைகளும் வன்னியிலிருந்து தென்னிலங்கை நோக்கி செல்ல தாயாராகியது.
இதன்போதுதான் வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பாளராக இருந்த அப்போதைய அமைச்சர் கரு ஜெயசூரிய விடுதலைப் புலிகளிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். “இலங்கை அரசாங்கம் எதிர்பாராதளவு இடர்பாடுகளைச் சந்தித்துள்ளது. இப்படியொரு பேரனர்த்தம் நிகழும் என்பதை நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. இங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமது முக்கியமான பொருட்கள் பலவற்றை இழந்துள்ளனர். அவசரமாகவும் அவசியமாகவும் உலர் உணவுப் பொருட்களும் உடுக்க உடைகளும் தேவைப்படுகின்றன. முடிந்தால் அனுப்பி வைக்கவும்” என்ற கோரிக்கை விடுதலைப் புலிகளிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அன்றைய காலம் வடகிழக்கு தமிழ் மக்கள் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்த காலமாகும். அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கேற்ப தென்னிலங்கை மக்களுக்காய் தம்மால் இயன்ற உணவு, உடை போன்றவற்றை தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளிடம் கையளித்தனர். இவற்றைச் சுமந்துகொண்டு வன்னியிலிருந்து பாரவூர்திகள் தென்னிலங்கை நோக்கிப் பறந்தன.
அப்போதும் இலங்கையில் நல்லிணக்கம் பற்றிய கதைகள்தான் சென்றுகொண்டிருந்தது. Daily News பத்திரிகையின் ஊடகவியலாளர் உடித குமாரசிங்க இதனை வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.இதுவரை இல்லாத ஒரு நல்லிணக்கச் சமிக்கையாக இதை வர்ணித்திருந்தார். “an unprecedented gesture signifying goodwill and reconciliation” என தலைப்பிட்டு எழுதப்பட்டது.
இதை இன்று பலரும் மறந்திருப்பர். ஆனால் அன்றைய நாட்களில் ஒரு நெகிழ்வுமிக்க சம்பவமாக இது பேசப்பட்டது. முக்கியமாக தென்னிலங்கை ஊடகங்களில் பேசப்பட்டது. போரின் காயங்களிலிருந்து மீண்டெழாத நிலையிலும் சக மனிதர்களுக்காக தமது பங்கில் சரிபாதியை தந்துதவிய வடகிழக்கு தமிழ் மக்களின் மனிதாபிமானம் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமான சிறந்த நல்லிணக்க சமிக்கையாக இருக்குமென கூறப்பட்டது. இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா தமிழீழம் எனும் இரு நாடுகளின் நல்லுறவு பற்றிய பொதுப்பார்வை ஒன்று அப்போது எழுந்திருந்தது.
அனைத்தும் முறிந்து மஹிந்த ராஜபக்ச சனாதிபதியாக வந்ததன் பிறகு புலிகள் உதவிய-பாதிப்புக்கு உள்ளாகிய இதே பிரதேசங்கள்தான் மஹிந்தவின் மிகப்பெரும் ஆதரவுக் கோட்டைகள் ஆகின. போர் முடிவுக்குவந்த சம்பவத்தை ’விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டார்கள்’ என்று நன்றி வெற்றி கொண்டாடியதும் இதே பிரதேசங்கள்தான்.
நடந்த உண்மைகளைச் சொல்லாமல் கடந்து செல்ல முடியவில்லை. அன்று இல்லை இப்போதும் சக மனிதர்களுக்காக இரங்குவதற்கு தமிழன் தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் அனைத்தையும் மறந்த மானுட மனங்கள் இந்த இரக்க குணத்தை ஏறி மிதித்துச் செல்கின்றன.