ஈழம் என்பது ஒரு தொலை தூர தீர்வு அல்ல. ஈழம் என்பது ஒரு மூன்று எழுத்து வார்த்தையும் அல்ல. ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின் உயிர்.
ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின் உரிமை, விடுதலை என்பதை அறிவார்ந்த தமிழ் சமூக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஈழம் என்பது உன் விடுதலை, உன் தாயின் விடுதலை, உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் தேசிய இன மக்களின் தேச விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை.
இது ஒரு தத்துவமாகும், இதனை ஒவ்வொரு தமிழ் மக்களும் தனது மனதில் உறுதி படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
மானம், கொடை, கலாச்சரம், வீரம் என அனைத்திலும் முன்னோடியாக இருந்த தமிழ் இனம் இன்று தனக்கு என ஒரு நாடு இல்லாமல் இருக்கின்றனர்.
தமிழருக்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்பதை எமது முன்னோர்கள் நினைக்கவில்லை. அவ்வாறு நினைத்திருந்தால் இன்று உலகில் சரிபாதி தமிழர் தேசமாக இருந்திருக்கும்.
எனினும், இந்த உலகில் பிறந்த ஒரே ஒருவருக்கும் மட்டுமே அந்த எண்ணம் இருந்துள்ளது. என்று ஒரு இனம் முழுமையான தேசத்தை அடைகின்றதோ அன்று அந்த இனம் முழுமையான விடுதலை அடையும்.
அந்த உணர்வு, தெளிவு, அந்த தேச விடுதலையை அடைவதுதான் தன் வாழ்நாள் இலக்கு என்று களத்தில் நின்ற ஒரே ஒரு புரட்சியாளர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் என அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மட்டுமே 200 ஆண்டுகள் கழிந்து தன் இனம் எப்படி வாழ வேண்டும் என்ற கனவு இருந்ததாக சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.