விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் புரிந்தேன்! மஹிந்த ராஜபக்சஅறிக்கை

227

வன்னியில் நடைபெற்ற யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கையொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடான யுத்த வெற்றியின் ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலகின் முன்னணி பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க உளவு அமைப்புகள் பட்டியலிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் புரிந்து எமது இராணுவம் கீர்த்தி மிக்க வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டது.

இந்த வெற்றி தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றி அல்ல. விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே யுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதே நேரம் யுத்த வெற்றியின் பின்னர் நாங்கள் விடுதலைப் புலிகளையும் பழிவாங்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பதினோராயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களை புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுதலை செய்துள்ளோம்.

எஞ்சிய சுமார் 300 பேர் வரையான முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை வழக்குத் தாக்கல் செய்யும் நோக்கில் தடுத்து வைத்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் அவர்களை விடுதலை செய்து கொண்டிருக்கின்றது.

அதே நேரம் இராணுவத்தினரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

அத்துடன் யுத்தத்தில் வெற்றி பெற்றது தவறான ஒரு விடயம் என்பதைப் போன்ற ஒரு கருத்தை இராணுவத்தினர் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியை முழு உலகும் வியந்து பாராட்டியது. அதனைக் கௌரவிக்கும் வகையிலேயே நாங்கள் வருடாந்தம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி வந்தோம்.

ஆனால் இந்த அரசாங்கம் நல்லிணக்கத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடும் என்று கூறி கலாசார நிகழ்வொன்றின் ஊடாக யுத்த வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

நாங்கள் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் மேற்கத்தேய நாடுகள் அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இன்று அவர்கள் வகுத்துக் கொடுக்கும் பாதையில் இந்த அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அதன் காரணமாகவே வடக்கில் சமஷ்டியை வலியுறுத்தும் அரசியல்வாதிகள் இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து இராணுவத்தினரைப் பரிகசிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தினரை வாபஸ் பெறும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் இராணுவத்தினரை யுத்தக் குற்றவாளிகளாக்கும் வகையிலான செயற்பாடுகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இவற்றை உடனடியாக நிறுத்தி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுதலை செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்சதனது அறிக்கையில் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

_arti_mahinda-rajapaksa-story_350_032814121236

SHARE