பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விடுதலைப் புலி சந்தேகநபர்களுடன் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாமல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது புலி சந்தேகநபர்களும் அவருடன் இருந்ததாகவும், அவர்கள் ஏன் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை என நாமல் என்னிடம் வினவினார்.
நீதிமன்றில் இது தொடர்பான வழக்குகள் உள்ளமையே பிரச்சினைக்கு காரணம். அந்த வழக்குகளை மீள பெற்றுக் கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியும். அப்படியும் இல்லை என்றால் அதனை விரைவுபடுத்த அந்த குழுவினருக்கு முடியும் என நாமலின் கேள்விக்கு நான் பதிலளித்தேன்.
நான் அதிகாரத்தில் இருந்த போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முயற்சித்தேன். அந்த சந்தர்ப்பத்தில் விடுதலை புலி சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அவர்களின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாமல் இருந்திருந்தால் தற்போது வரையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள். அதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டன.
நீதிமன்றில் குற்றச்சாட்டுகள் உள்ளன. அது நிறைவடையும் வரையில் எங்களால் இந்த பிரச்சினை தொடர்பில் பேச முடியாது. இல்லை என்றால் அவர்களும் அந்த காலத்திலேயே விடுதலையாகி செல்ல முடிந்திருக்கும். ஏன் என்றால் அவர்களை விடவும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி வெளியே சென்றுள்ளதாக மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.