விடுதலை  வீரர்களை  நினைவு  கூருவது  அவரவர்  சார்ந்த  சமூகங்களின்  கடமை

163
முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
(மன்னார் நகர் நிருபர்)
உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை என முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை புராதன கிரேக்கர் காலம்  முதல்  இன்று  உலகில்  இடம்பெறும்  யுத்த  காலங்களின்  போதும்  அதன்  பின்னரும்  காண  முடியும்.
விடுதலை  வீரர்களை  நினைவு  கூருவது  அவரவர்  சார்ந்த  சமூகங்களின்  கடமை. இன்றைய மனித  நாகரிகத்தின்  முக்கியமான  ஒரு  பண்பாக  இது  காணப்படுகிறது.
முரண்பாடுகளுக்கான தீர்வு  கோட்பாடுகளிலும்  யுத்தங்களில்  உயிர்  நீத்தவர்களை  நினைவு  கூரும்  நினைவுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 ஆனால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படும் துர்பாக்கிய நிலைமை இன்று காணப்படுகிறது.
 யுத்தத்தில்  உயிர் நீத்த  தமது  பிள்ளைகளை  தாய்  தந்தையர்  நினைவுகூர்ந்து  அழுவதையோ, தமது  உடன் பிறப்புக்களை  சகோதரங்கள்  நினைவு  கூர்ந்து  தேற்றிக்கொள்வதையோகூட சகித்துக்கொள்ள  முடியாத  தெற்கின்  இழி  மனோநிலையை  சர்வதேச  சமூகம்  புரிந்து கொள்ளவேண்டும்.
 தமிழ்  மக்களின்  உரிமைக்களுக்காக  உயிர்  நீத்த  எமது  விடுதலை  வீரர்களை  நினைவுகூரும் எமது  மக்களின்  உணர்வினை  எந்த  எதிர்ப்பினாலும்  தகர்த்து  விட  முடியாது  என்று  நான் உறுதியாக  நம்புகின்றேன்.
அவ்வாறு  எதிர்ப்பவர்கள்  எம்  மக்கள்  மனதில்  மேலும்  மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தினையும் மேலெழுச் செய்கின்றார்கள்.
அமைதியான  வழியில்  உரிய  வழிமுறைகளை  பின்பற்றி  எமது  மக்கள்  நினைவேந்தல் நிகழ்வுகளைச்  செய்யவேண்டும்  என்று  வேண்டிக்கொள்கின்றேன்.
  எமது  மக்கள்  சுதந்திரமாகவும் சகல  உரிமைகளுடனும்  வாழவேண்டும்  என்ற  உயரிய  சிந்தனையுடன்  தமது  இன்னுயிர்களை ஈகம் செய்த எமது துயில் கொள்ளும் உள்ளங்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்து கொண்டிருப்பர் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE