வித்யா… நினைத்துப் பார்க்கிறேன்!
2010 இல், புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் எனது வகுப்பிற்கு புதிய மாணவி ஒருவர் வந்திருப்பதாக நான் வகுப்பினுள் நுழைந்ததும் ஏக குரலில் கூறினர் என் வகுப்பு மாணவர்கள். பார்த்த போது வகுப்பின் கடைசி வரிசையில் இருந்த அந்த மாணவி வெருட்சி உடன் எழுந்து நின்றாள். பெயரைக் கேட்ட போது ,”வித்தியா” என்றாள்.
ஆங்கில பாடம் என்றால் வித்தியா என்றே அந்த வகுப்பு மாணவர்கள் கூறும் அளவுக்கு அவளின் திறமை இருந்தது. ஆங்கிலம் மட்டுமல்ல, எல்லாப் பாடங்களிலும் திறமை காட்டிய அவளுக்கு கணிதம் மட்டும் சவால் விட்டது. அதில் கவனம் எடு என்று எல்லா ஆசிரியர்களுமே கூறும் போது அவளின் பதில் “சுட்டுப் போட்டாலும் வராது சேர் “.
எதிர்கால இலட்சியம் பற்றி ஆங்கிலத்தில் ஒருமுறை நான் எழுதச் சொன்ன போது தான் ஒரு பத்திரிகையாளராக வருவதே நோக்கம் என்று எழுதி இருந்தாள். உயர்தரத்தில் கூட அந்தத் துறையை தான் ஒரு பாடமாக அவள் தெரிவு செய்து படித்தாள்.
ஜனாதிபதி செயலணி குழுவின் ஆங்கிலப் பாட இறுவட்டுக்கள் கொழும்பில் வைத்து வழங்கப்பட்ட போது எம் பாடசாலை தரப்பில் இவளைத் தெரிவு செய்த போது ஆங்கிலத்தில் கதைக்க வேண்டி வருமா என்று அப்பாவியாக அவள் கேட்டது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. மகாவித்தியாலயத்தில் இருந்து நான் இடமாற்றம் பெற்ற போது அதை ரத்து செய்ய முடியாதா என்று ஒரு மகளைப் போல் அவள் வினவியது இன்னும் மனதை நெருடுகிறது .
வேலணை மத்திய கல்லூரிக்கு ஒரு மாதம் முன்னர் ஏதோ செமினார் என்று வந்த போது கூட என்னைக் கண்ட போது சிரிப்புடன் ஓடி வந்து அளவளாவி அவளின் நன்றி விசுவாசத்தை கூறியது இன்னும் என்னுள் எதிரொலிக்கிறது.
இறப்பு பொதுவானது. ஆனால் இவளின் இறப்பு கொடூரம். அந்தப் அப்பாவி பிஞ்சுக்கு பொருத்தம் இல்லாதது .
எப்போதும் தலை வலிக்கிறது கண் குத்துது என்று அடிக்கடி கண்ணீர் விடும் அவள் இறுதி நேரத்தில் என்ன அவஸ்தைப் பட்டிருப்பாள்… கடவுளே…
இறுதிச் சடங்கில் நாம் மழையில் தோய்ந்த படி சென்றது நல்லதே.. எமது கண்ணீர் வெளியில் தெரியக் கூடாது… போய் வா மகளே…