வித்தியா கொலை வழக்கு! சிக்கலில் விஜயகலா மகேஸ்வரன்

242

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர்.

அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது அந்த இடத்தில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காட்சிகள் அடங்கியிருந்தன.

குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

2015ம் ஆண்டு மே மாதம் மாணவி வித்தியா கூட்டுப் பாலியலின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் தப்பி செல்வதற்கு உதவிசெய்த குற்றச்சாட்டில் லலித் ஜயசிங்க கடந்த 15 ஆம் திகதி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

SHARE