வித்தியா படுகொலை வழக்கில் நான் எதையும் எதிர்கொள்ள தயார்- துவாரகேஸ்வரன்

209

வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் மேலதிகமாக புதிய வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கை எத்தகைய சூழ்நிலையிலும், எத்தகைய விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும், அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் உண்மையற்ற கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. என் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து குற்றவாளிகளையும் ஈ.பி.டி.பியினர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸாரைத் தாக்கி காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சியை நாங்கள் சென்று முறியடித்திருந்தோம்.

“சுவிஸ்குமாரை முச்சக்கரவண்டியில் ஏற்றிப் போல்” என்கின்ற ஈ.பி.டி.பி பிரதேசசபை தலைவர் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால், சுவிஸ்குமார் வேலணை துறையூர் சந்தியில் இடைமறிக்கப்பட்டு பொதுமக்களால் கட்டப்படுகிறார். அதன் பின்னர் விஜயகலா மகேஸ்வரன் அங்கு வருகை தந்து அவரை அவிழ்த்து விட்டிருந்தார்.

கபிலன் ரவல்ஸ் என்கின்ற உரிமையாளர் ரட்ணாவின் சகோதரர்களின் பஸ்ஸில் சென்று குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தைத் தாக்கிய 40 பேர் கொண்ட குழுவினர் தான் சுவிஸ்குமாரை அடித்துக் கொல்கின்றோம் எனத் தெரிவித்து அவரைப் புங்குடுதீவு கொண்டு சென்று விட்டார்கள்.

பின்னர் சட்டத்தரணி ஒருவர் தான் சுவிஸ்குமாரை பொலிஸ் நிலையத்தில் சரணடைய வைத்த பின்னர் கொழும்புக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த இரண்டாண்டில் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அனைவரும் மெளனம் காத்தார்கள்.

2015 ஜூன் மாதம் 01ஆம் திகதி வித்தியா பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் தாக்கல் செய்த பீ அறிக்கையின் பிரகாரம் நீதவான் அதிருப்தியுற்று இந்த வழக்குத் தொடர்பான விசாரணையைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்தார்.

அப்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி அந்த வழக்கிலிருந்து சுவிஸ்குமாரைக் காப்பாற்றுவதற்காக மூன்று கேள்விகள் தொடுத்திருந்தார்.

முதலாவது கேள்வி – சுவிஸ் குமாரை என்ன அடிப்படையில் கைது செய்தீர்கள்?

இரண்டாவது கேள்வி – யார் முறைப்பாடு செய்திருந்தார்கள்?

மூன்றாவது கேள்வி – முறைப்பாடு செய்தவருக்கு இந்த விடயத்தில் என்ன சம்பந்தம்?

இதனால் விரக்தியுற்ற நீதவான் இந்தப் பாரிய பாலியல் வன்முறைப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எப்படி நீங்கள் இவ்வாறான கேள்விகள் கேட்க முடியும் எனக் கூறியே உடனடியாக இது தொடர்பான விசாரணையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பாரப்படுத்தியிருந்தார்.

அன்றைய தினமே ஐவர் கொண்ட குழு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு சில மீற்றர்களுக்கு அப்பாலுள்ள அத்தனை தடயங்களையும் அழித்தார்கள்.

இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை இரண்டாண்டுகளாக முடிவின்றித் தொடர்கிறது. இதனால் தான் டி.என்.ஏ பொருந்த முடியாத நிலையேற்பட்டது. இரத்தமாதிரி ஒத்துப் போக முடியாமல் போனது.

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான பிரதான சந்தேகநபர்களின் மிக நெருக்கமானவர் தான் குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியவர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து தமிழ்த் தேசியத் தூணாக, மிகப் பலமாக கதைத்து ஊடகங்களில் பிரபலமாகக் காணப்படுகின்றவர்கள் இந்த வழக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பில்லை என்று கூறி கொழும்பிற்கு மாற்றுவதற்கு முயற்சித்தார்கள்.

அதன் பின்னர் சட்டத்தரணி ஊடாக என்னை இந்த வழக்கில் தலையிடா வண்ணம் கொழும்பில் நீதிமன்றங்களுக்கு ஏற்றி தடுக்க முற்பட்டார்கள்.

அதன் பின்னர் ரயல் அட்பார் விசாரணை இடம்பெறக் கூடாது என்பதிலும் முயற்சிகள் எடுத்தார்கள். பின்னர் கொழும்புக்கு ரயல் அட்பார் விசாரணையை மாற்றச் சொன்னார்கள். தற்போது விஜயகலா மகேஸ்வரனை இந்த வழக்கில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருடைய சட்டத்தரணிகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறே நீதவான் உத்தரவிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையின் படி எதிர்வரும் 08ஆம் திகதி விஜயகலா மகேஸ்வரனை கைது செய்வதா? விசாரிப்பதா? அல்லது குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா எனத் தீர்மானிக்கவுள்ளார்.

என் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கணம் வரை படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்ப அனுசரணையாளராக நான் இருந்து வருகிறேன்.

ஆறு கடிதங்களை குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் என்னிடம் தந்த நிலையில் வழக்குக்காக 3.8 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுச் சட்டத்தரணிகளை நியமித்துள்ளோம்.

இப்போது அரசதரப்புச் சட்டத் தரணிகள் வாதிடுவதால் விஸ்வலிங்கம் மணிவண்ணனை வித்தியா தரப்புச் சட்டத்தரணியாக நியமித்துள்ளோம்.

நாங்கள் எங்களுடைய இரத்தம் சிந்தி உழைத்த பணம், மகேஸ்வரனின் குடும்பப் பணத்தைத் தான் மாணவி வித்தியாவிற்கு நீதி கேட்பதற்காக செலவிட்டு வருகிறோம்.

என்னுடைய கைகளில் இந்த வழக்கு வந்த காரணத்தால் தான் குற்றவாளிகள் கடந்த இரண்டாண்டு காலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இல்லாவிடில் குற்றவாளிகள் எப்போதோ தப்பித்தித்திருப்பார்கள் என்பதையும் நான் பகிரங்கமாகக் கூறிவைக்க விரும்புகிறேன்.

சாரத்தோடும், சாப்பிடத் தட்டுமில்லாமல் போனவர்கள் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் வருகிறார்கள். இதன் பின்னணி அத்தனையும் எங்களுக்குத் தெரியும். நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இடம்பெற்று வருவதால் இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட முடியாமலுள்ளது.

இந்த வழக்கைத் திசை திருப்புவதற்கும், எங்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிலத்திலும், புலத்திலும் சிலர் செயற்பட்டு வருகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE