முத்த காட்சியில் நடித்ததால் வீட்டில் பிரச்சினையா?: ஜீ.வி.பிரகாஷ்குமார் பேட்டி

336

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் இவரும், மனிஷாயாதவும் உதட்டுடன் உதடு சேர்த்து நடித்த முத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக ஜீ.வி.பிரகாஷ்குமார் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- இசையமைப்பாளராக இருந்த நீங்கள் நடிகராக மாறியது ஏன்?

பதில்:- நான் நடிகர் ஆவதற்கு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் காரணம். அவர்தான் என்னிடம், ‘‘நீங்கள் நடிக்கலாமே’’ என்று யோசனை சொன்னார். ‘‘இசையமைக்கும் வேலை நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது’’ என்று நான் சொன்னேன்.

அவருடைய பட நிறுவனத்தில் என்னை நடிக்க வைப்பதாக அவர் கூறினார். இதற்கிடையில், ‘டார்லிங்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்த படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன.

கேள்வி:- நடிப்பது சுலபமாக இருக்கிறதா, சிரமமாக இருக்கிறதா?

பதில்:- பாடுகிற மாதிரிதான் நடிப்பதும்…கதாநாயகனாக நடிப்பது சுலபம் அல்ல. கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

எடை கூடியிருக்கிறதா? என்று தினமும் ‘செக்’ பண்ணிக் கொள்கிறேன். உடம்பை அவ்வளவு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. வசனத்தை மனப்பாடம் செய்து முகபாவனையுடன் பேச வேண்டியிருக்கிறது.

கேள்வி:- முதல் படமே பேய் படமாக அமைந்ததே…உங்களுக்கு பேய் நம்பிக்கை உண்டா?

பதில்:- என்னுடைய சின்ன வயதில் எங்க அத்தை ஒருவர் பேய் கதைகளாக சொல்லி, பேயை பற்றிய பயத்தை அதிகரித்து விட்டார். இருட்டு என்றாலே எனக்கு பயம். இருட்டுக்குள் இப்பவும் தனியாக போக மாட்டேன்.

கேள்வி:- ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில், கதாநாயகி மனிஷாயாதவ் உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடித்ததால், வீட்டில் பிரச்சினை என்று ஒரு தகவல் பரவியதே?

பதில்:- வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. முத்த காட்சி பற்றிய சர்ச்சையை பரப்பியதே அந்த படத்தின் டைரக்டர் ஆதிக்தான். அது ஒரு நீளமான காட்சி. இருவரும் நடந்து வருவது போலவும், ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது போலவும், அப்புறம் முத்தம் கொடுப்பது போலவும் காட்சி. இதை 38 முறை படமாக்கினார்கள். அது, 38 முறை முத்த காட்சியை படமாக்கியதாக வெளியில் பரவி விட்டது. முத்த காட்சியை ஐந்து முறை படமாக்கியதுதான் உண்மை.

கேள்வி:- இசை, நடிப்பு இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

பதில்:- இசையையும், நடிப்பையும் சரிசமமாக பார்த்துக்கொள்கிறேன்.

கேள்வி:- எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

பதில்:- பக்கத்து வீட்டு பையன் போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.’’

இவ்வாறு ஜீ.வி.பிரகாஷ்குமார் கூறினார்.

SHARE