விமர்சனங்களால் மரியாதை குறைகிறது: வருத்தத்தில் கோஹ்லி

284

முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது என்று இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐக்கு அளித்துள்ள பேட்டியில், நம் நாட்டில் ஒரு தொடர் நடந்திருக்கிறது, இதில் நம்மைச் சேர்ந்தவர்களே பலவீனங்களையும், விமர்சனத்துக்குரிய பகுதிகளையும் மட்டுமே பார்த்து கருத்து கூறிக்கொண்டிருப்பதும், நாங்கள் விளையாடிய நல்ல கிரிக்கெட் பற்றி எதுவும் பேசாமல் இருப்பதும் மனவேதனை அளிக்கிறது.

அவர்கள் பிட்ச் பற்றியும் அது எப்படி காரணியாகிறது என்பது பற்றியும் பேசி வருகின்றனர்.

இந்த தொடரில் அதிகபட்ச ரன்களை எடுத்த 5 வீரர்களில் இந்திய வீரர்கள் 4 பேர். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இரண்டு பேர் இந்திய வீரர்கள். நாங்கள் சாக்குபோக்கு எதுவும் கூறவில்லை, நேர்மையான முறையில் ஆடினோம் இதனால் சாதகமான முடிவுகளைப் பெற்றோம். நாங்கள் வெற்றி குறித்து பெருமைப்படுகிறோம்.

“கிரிக்கெட் ஆட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடியவர்களே கடும் விமர்சனங்களை வைப்பது காயப்படுத்தவே செய்கிறது. அனைவருமே இப்படிப் பேசுகின்றனர் என்று நான் கூறவரவில்லை.

பலரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் இத்தகைய விமர்சனங்களைச் சந்தித்திருப்பதால் வீரர்களின் மனநிலை பற்றி புரிந்து கொள்கின்றனர்.

அவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர், சரியான விடயத்தைக் கூறுவதோடு, சில உத்திகளையும் கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் சிலர் எதிர்மறை விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக இது மோசமானதாகப் படுகிறது.

இவர்கள் தொடுக்கும் விமர்சனங்களால் அவர்கள் மீதான மரியாதை சற்றே இறங்கி விடுகிறது. எந்த ஒரு வீரரிடமாவது தவறுகளை இவர் காண நேர்ந்தால் அவர்களிடம் சென்று பேசி அதனைச் சரிசெய்வதே சிறந்தது.

அதுவும் நாட்டுக்காக விளையாடாத ஒருவர் சர்வதேச கிரிக்கெட் வீரர் குறித்து எதிர்கருத்துகளை தெரிவிக்க உரிமையில்லை. இதில் அர்த்தம் இருப்பதாக நான் கருதவில்லை. அவர்களே இத்தகைய சூழ்நிலைகளை களத்தில் சந்திக்காத போது, கிரிக்கெட் வீரராக இல்லாத ஒருவர் உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் இருந்திருந்தால் எப்படி வித்தியாசமாக செயலாற்றியிருப்பார் என்று பேசுவது கூடாது என்று கூறியுள்ளார்.

SHARE