விமானத்தில் ஸ்பிரிட்டை குடித்த மயங்க் அகர்வால்., உயிருக்கு ஆபத்து இல்லை; 2 நாள்களுக்கு பேச முடியாது

111

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்கு கேப்டனாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தெரிந்ததே.

அடுத்த ரஞ்சி போட்டிக்காக அகர்தலாவில் இருந்து சூரத்திற்கு விமானத்தில் பயணம் செய்தபோது, தனது இருக்கைக்கு எதிரில் இருந்த திரவம் தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். ஆனால் அதில் இருந்தது ஸ்பிரிட் என பின்னர் சோதனையில் தெரியவந்தது.

அவர் அதனை குடித்த சில நொடிகளில் அது தண்ணீர் இல்லை என்பதை அவர் உணர தொடங்கினார், ஆனால் அதற்குள் அவரது வாயிலும் தொண்டையிலும் எரிச்சல் ஏற்பட்டு தவித்தார்.

மேலும் சில நிமிடங்களில் வாயில் வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உண்டானதாகவும், தன்னால் சரியாக பேசமுடியவில்லை என்பதையும் மயங்க் தனது மேலாளரிடம் கூறியுள்ளார்.

விமானத்தில் கர்நாடக அணியுடன் இருந்த அகர்வால் பலமுறை வாந்தி எடுத்தார். இதன் காரணமாக, அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

48 மணி நேரம் பேச முடியாது
மயங்க் அகர்வாலின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அகர்தலாவில் உள்ள ஐஎல்எஸ் வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூர் செல்லவுள்ளார்.

மயங்க் அகர்வால் ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டார், ஆனால் உதடுகளில் புண்கள் மற்றும் வீக்கம் காரணமாக 48 மணி நேரம் பேச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸில் புகார்
மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் பொலிஸில் புகார் அளித்தார்.

விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மாயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மாயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

SHARE