வியாழேந்திரன் மீது வீசப்படும் துரோகி பட்டங்களும் அவரின் அரசியல் எதிர்காலமும்

160

 

viyalendranகடந்த இரு வாரங்களாக தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரளயத்தின் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் கட்சித்தாவல் தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் விலைகொடுத்து வாங்கிவிட முடியாது என முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கூறி 48மணி நேரம் கடப்பதற்கு முதல் கனடாவிலிருந்து வந்த கையோடு நேரடியாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரதியமைச்சர் பதவியை வியாழேந்திரன் பெற்றுக்கொண்டார்.

 

தமிழர் அரசியல் பரப்பில் இது அதிர்ச்சியான பரபரப்பான விடயம் தான்.

பொதுவாக முஸ்லீம் கட்சிகளிடையே ஆளும் கட்சிக்கு மாறி அமைச்சு பதவிகளை பெறுவது என்பது வழமையானதுதான். 2010ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பியசேனா ஆளும் கட்சிக்கு மாறிய சம்பவத்தை தவிர்த்து பார்த்தால் சுமார் 40 வருடங்களுக்கு பின்னர் தமிழ் கட்சி ஒன்றிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறி அமைச்சு பதவியை பெற்ற சம்பவம் தற்போது பதவியாகியிருக்கிறது.

1979ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை ஆளும் கட்சிக்கு மாறி இந்து கலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சை பெற்றுக்கொண்டார்.

இராஜதுரையை துரோகி என தூற்றியவர்கள் மத்தியில் அவர் கட்சி மாறி அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதை மட்டக்களப்பு மக்களின் ஒரு பகுதியினர் வரவேற்றிருந்தனர். ஆனால் இன்றுவரை இராஜதுரை அவர்களை துரோகி என சொல்லும் ஒரு தரப்பும் இருக்கத்தான் செய்கிறது.
கடந்த இரு வருடங்களுக்கு முதல் இராஜதுரை யாழ்ப்பாணத்திற்கு சென்ற போது ரெலோ கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் துரோகி என தூற்றி ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். இச்செயல் சிவாஜிலிங்கத்திற்கு தான் இழுக்கே அன்றி இராஜதுரை அவர்களுக்கு பாதிப்பாகவோ அவமானமாகவோ இருந்திருக்காது.

அன்று இராஜதுரையை எவ்வாறு துரோகி என தூற்றினார்களோ அதேபோல இன்று வியாழேந்திரனை சிலர் துரோகி என தூற்றுகின்றனர். எங்கள் கழுதை ஒன்றை நீ திருடி விட்டாய் என ஜனாதிபதியை ஏசும் அளவிற்கு இந்த கட்சி தாவல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கோவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் அன்று இராசதுரை கட்சி மாறி அமைச்சு பதவியை ஏற்றபோது மட்டக்களப்பில் இருந்த ஒரு சாரார் அதனை வரவேற்றது போல இன்று வியாழேந்திரன் கட்சி மாறி அமைச்சு பதவியை ஏற்றதை வரவேற்றிருக்கிறார்கள். மட்டக்களப்பில் இந்த கட்சிதாவலுக்கு பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்பட்ட போதிலும் கணிசமானவர்கள் இதனை வரவேற்றிருக்கிறார்கள்.

வியாழேந்திரன் கட்சி மாறி அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டதை வரவேற்கும் மக்கள் மத்தியில் சொல்லப்படும் காரணங்களும் நியாயமானவை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அரசியல் அதிகாரங்களை வைத்துக்கொண்டு தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது. அதனை தடுக்க முடியாத அநாதைகளாக தாம் இருப்பதாக தமிழர்கள் உணர்கின்றனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், மற்றும் அமைச்சர் என்ற அதிகாரத்தை வைத்து கோவில் காணியை சுவீகரித்தேன் என அமைச்சர் ஒருவர் கூறிய வீடியோவை பார்த்த ஒவ்வொரு தமிழனும் தமது இயலாமையை எண்ணி தாம் அரசியல் அநாதைகள் என்பதை எண்ணி வெம்பியிருப்பான்.
தான் செய்தவைகளில் ஒரு சம்பவத்தை அமைச்சர் சொல்லியிருந்தார். சொல்லாத சம்பவங்கள் ஆயிரம். இந்த சம்பவங்களால் தினம் தினம் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க வழியில்லையா என்ற ஏங்கியிருந்த மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு வியாழேந்திரனின் பதவி ஏற்பு ஒரு துரும்பாக கிடைத்திருக்கிறது.

வியாழேந்திரனின் அமைச்சு பதவி தங்களின் ஏக்கங்களுக்கு ஒரு தீர்வாக அமைந்து விடும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகத்தான் மட்டக்களப்பு தமிழ் மக்களின் ஒருசாரார் இதை வரவேற்றிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மக்களின் இந்த ஏக்கத்தை உணரும் பக்குவமோ அறிவோ வெளியில் இருந்து துரோகி பட்டங்களை வீசிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடையாது.

முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் வழமையாக மட்டக்களப்பான் துரோகி என பட்டங்களை அள்ளி வீசுவதில் குறியாக உள்ளனர்.
வியாழேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி ஆளும் கட்சியில் அமைச்சு பதவியை பெற்றது சரியா தவறா என்ற விடயம் தனியாக ஆராயப்பட வேண்டும்.

இந்த அமைச்சு பதவியை பெற்றதன் மூலம் மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்ப்பது போல மட்டக்களப்பில் தமிழர் தரப்புக்கு அரசியல் அதிகார பலம் வந்து விடும் என்று இப்போது சொல்லிவிட முடியாது. கிடைச்ச அமைச்சு பதவியை தனது சுகபோகத்திற்கு அனுபவித்து விட்டு போகப்போகிறாரா அல்லது மட்டக்களப்பு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பை தடுக்க அதனை பயன்படுத்துவாரா என்பது காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இந்த அமைச்சு பதவி கூட நிரந்தரமானதா இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த பாராளுமன்றம் நிலைக்குமா என்பதும் தெரியாது.
சில வேளை பாராளுமன்றம் கலைக்கப்படலாம். கலைக்கப்பட்டால் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சு பதவியை பெறுவாரா என்பதும் கேள்விக்குறிதான்.

வியாழேந்திரன் நீண்டகால கட்சித்தொண்டராக இருந்து தேர்தலில் குதித்தவர் அல்ல.

2015ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வெளியான போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்கேட்டு சென்ற வியாழேந்திரனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் புளொட் இயக்கத்தின் சார்பில் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடிக்கலாம் என்பதை அறிந்து கொண்ட வியாழேந்தரன் புளொட் தலைவர் சித்தார்த்தனை நாடி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்து கொண்டார்.

தேர்தல் முடியும் வரை தான் புளொட் சார்பில் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த கதையை தேர்தல் பிரசாரத்தின் போது சொன்னது கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஆதரவு அலையை பயன்படுத்தி தனது மாணவர் படையை வைத்து தனக்கான விருப்பு வாக்கை பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றதன் பின்னர் தன்னை வேட்பாளர் பட்டியலில் இணைத்த சித்தார்த்தனுக்கு வியாழேந்திரன் நன்றி தெரிவித்த போதுதான் வியாழேந்திரன் புளொட் இயக்கத்தின் சார்பில் தான் மட்டக்களப்பில் போட்டியிட்டார் என்ற விடயம் பலருக்கும் தெரியவந்தது.
எது எப்படியோ வியாழேந்திரன் மிகச்சாதுரியமாக தான் வெற்றி பெறுவதற்கு புளொட் இயக்கத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பயன்படுத்திக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது தமிழரசுக்கட்சியுடனோ உறவை வளர்த்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் விலகி நின்று தனது அரசியலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடமாக தமிழரசுக்கட்சியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் தான் வியாழேந்திரன் கட்சி தாவி விட்டார் என்ற பிரளயம் நடந்திருக்கிறது.

இப்போது வியாழேந்திரனின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்வியும் எழுகிறது. இனி அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தான் போட்டியிட முடியும். இல்லையேல் சுயேச்சை குழுவை அமைத்து போட்டியிட முடியும்.

இந்த இரண்டு தெரிவும் வியாழேந்திரனுக்கு வாய்ப்பாக இருக்கும் என சொல்ல முடியாது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு உறுப்பினரை தான் பெற முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளி சிறிலங்கா சுதந்திரக்கட்சியால் முதலிடத்திற்கு வர முடியாது.

ஒரு உறுப்பினரை மட்டும் பெறக் கூடிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து யார் தெரிவு செய்யப்படுவார். ஹிஸ்புல்லாவா, பிள்ளையானா, வியாழேந்திரனா என்ற கேள்வி வருகின்ற போது ஹிஸ்புல்லாதான் விருப்பு வாக்கில் அதிகம் பெற்று அந்நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தம்வசப்படுத்திக்கொள்வார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது தான் கடந்த கால வரலாறும் கூட. சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சியிலோ தமிழர்கள் போட்டியிட்டால் அவர்களால் அக்கட்சிக்கு வாக்குகளை பெற்றுக்கொடுத்து முஸ்லீம் ஒருவரை உறுப்பினராக தெரிவு செய்ய வழி ஏற்படுத்துவார்களே ஒழிய தமிழர்களால் வெற்றி பெற முடியாது.

தேசியப்பட்டியலிலும் கருணா பிள்ளையான் வியாழேந்திரன் என யாராவது ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கலாம்.
எனவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் வியாழேந்திரனின் பாராளுமன்ற எதிர்காலமும் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறிதான்.
தமிழ் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிய ஒருவர் மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வரலாறு இதுவரை இல்லை.

SHARE