விருப்பு வாக்குகளில் முறைகேடுகள் நடக்கவில்லை! தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தல்

277

விருப்பு வாக்குகள் எண்ணும் செயற்பாடுகளின் போது எதுவித முறைகேடுகளும் நடக்கவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியுற்ற அரசியல்வாதிகளில் சிலர் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்று தாம் தோல்வியுற நேர்ந்துள்ளதாக கூறி வருகின்றனர். இன்னும் வாக்கு மீள் எண்ணிக்கைக்காக நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயங்களைக்குறித்து திவயின பத்திரிகைக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

தேர்தலின் போது முதலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். இதன் போது வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இணைந்து செயற்படுவார்கள். அதன் காரணமாக எந்தவொர தனிப்பட்ட வேட்பாளருக்கும் தனது வாக்குகளைக் கூட்டிக் கொள்ளவோ, அடுத்தவரின் வாக்குகளை குறைப்பதற்கோ முடியாது.

தேர்தல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையை இவ்வாறான குற்றச்சாட்டுகள் தகர்த்துவிடும்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் எதிர்வரும் மூன்று மாத காலத்தினுள் தங்கள் சொத்துக் கணக்கை ஒப்படைக்க வேசண்டும். வெற்றிபெற்றவர்கள் மாத்திரமன்றி தோல்வியுற்றவர்களும் தங்கள் சொத்துக் கணக்கை ஒப்படைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

 

SHARE