வடக்கும் தெற்கும் ஒத்திசைவாளர்களாக செயற்பட முடியாது என்பதால் தான் நாங்கள் சுயநிர்ணய உரிமையை கோருகின்றோம். என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண உரித்துக்களை மத்தி எடுத்துப் பிரயோகிப்பது என்பது அன்னியர் ஒருவர் எமது சயன அறையில் வந்திருந்து அங்கு உறைந்திருக்க உரிமை கொண்டாடுவதற்கு ஒப்பானதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் செய்தல் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காடுகள் துப்பரவு செய்யப்படுவதனால் சுற்றாடலுக்கு பாரிய அழிவு ஏற்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலைமையின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதியுடனோ, இல்லாமலோ தற்போது செய்யப்படும் அனைத்து காடுவெட்டுதல்கள், துப்பரவாக்குதல்களை உடனடியாகச் செயற்படும்வண்ணம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமங்கள், அனுமதிப்பத்திரங்களை மீள செல்லுபடியாக்குதல் மற்றும் புதிதாக உரிமங்கள், அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு எதிர்காலத்தில் அலுவலர்களின் குழுவொன்று நியமிக்கப்படுவதுடன், அந்த புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைகளுக்கமைய மேற்குறித்த விடயங்கள் தொடர்பில், தொடர் நடவடிக்கையெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.”
எமது சில அலுவலர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து எமது மாகாணசபைகளின் உரித்துக்களைப் பறித்தெடுத்துக் கொடுக்க விழைவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால்த்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் நடந்து கொண்டமை கண்டனத்திற்கு உரியதாகக் காணப்படுகின்றது.
அவரின் அன்றைய செயல் வடக்கிற்கும் கிழக்கிற்குமே பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதானல்த்தான் மாகாண வனத்திணைக்களம், வனஜந்துக்கள் திணைக்களம் ஆகியன வேறு சில திணைக்களங்களுடன் சேர்த்து மாகாணத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கோரிவருகின்றோம். சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் கூறிவரும் நாங்கள் இதனைக் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.
எமது நிலங்கள் பறிபோவதற்கும் எமது வனங்களும் ஜந்துக்களும் பாதிப்படைவதற்கும் எமது வளங்கள் சூறையாடப்படுவதற்கும் நாங்கள் ஒத்திசைவாளர்களாக இருந்து நடக்க முடியாது என்ற காரணத்தினால்த்தான் நாங்கள் சுயநிர்ணய உரிமை வேண்டி பற்றுறுதியுடன் செயல்ப்படுகின்றோம். சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் மத்தி தனக்கென ஏற்றுக் கொண்ட பல விடயங்களையும் மாகாணத்திற்குக் கையளிக்க வேண்டியிருக்கும்.
இதனால்தான் ஐக்கிய நாடுகளில் இருந்து வந்த உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி விளக்கி வருகின்றேன். எமக்குரிய மாகாண உரித்துக்களை மத்தி எடுத்துப் பிரயோகிப்பது என்பது அன்னியர் ஒருவர் எமது சயன அறையில் வந்திருந்து அங்கு உறைந்திருக்க உரிமை கொண்டாடுவதற்கு ஒப்பானதாகும்.
திவிநகும என்பதும் மாகாண அதிகாரங்களை மத்திக்கு எடுத்த ஒரு செயல்ப்பாடே. மத்தியின் உள்ளீடல்கள்முற்றிலும் நிறுத்தப்பட்ட மாகாணத் தன்னாட்சியைத் தானே கொண்டு நடத்த வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பு. முக்கியமான சில விடயங்கள் மட்டும் மத்தியிடம் இருக்கலாம். விரைவில் இது சம்பந்தமான ஒரு தீர்மானம் அரசியல் ரீதியாக எடுக்கப்படுமெனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.