விளையாட்டின்மூலம் இளைய சமுதாயம் ஒற்றுமைப்படுகின்றது – அமைச்சர் டெனிஸ்வரன்…

271
விளையாட்டின்மூலம் இளைய சமுதாயம் ஒற்றுமைப்படுகின்றது – அமைச்சர் டெனிஸ்வரன்…
வலைப்பாடு தூய அன்னம்மாள் ஆலயத் திருவிழாவினை முன்னிட்டு முன்னாள் வலைப்பாடு பங்குத்தந்தையும் ஜெக மீட்பர் விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகருமாகிய அருட்பணி கொன்சால்வேஸ் அவர்களது ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இடம்பெற்றுள்ள வேளையிலே அதன் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் 31-07-2016 ஞாயிறு மாலை 3.00 மணியளவில் ஜெக மீட்பர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் இறுதி நாள் நிகழ்விற்கு புனித அன்னம்மாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஜெக மீட்பர் விளையாட்டுக்கழகம் மற்றும் கிராம மக்கள் ஆகியோரது அழைப்பின்பேரில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் நமது மாகாணம் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய ஓர் மாகாணமெனவும், ஆனால் அண்மைக்காலமாக உதைபந்தாட்டம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது, இதற்க்கு பல காரணங்கள் காணப்படுகின்றன, குறிப்பாக உதைபந்தாட்டத்தை வளர்த்துவிடவேண்டிய அமைப்பினரே அதற்க்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றனர். இந்நிலை மாறி சம்பந்தப்பட்டவர்கள் ஒற்றுமைப்பட்டு கழக வீரர்களை ஊக்கப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த போட்டி பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும் மிகுந்த ஒற்றுமையுடன் இரண்டு கழகங்களும் மோதிக்கொண்டமை பாராட்டத்தக்க ஓர் விடயம் என்றும், இதே போலவே எல்லா உதைபந்தாட்ட போட்டிகளும் அமைந்தால் இன்னும் நன்மையாகவும் பார்க்கும் இரசிகர்களை சந்தோஷப்படுத்தகூடிய வகையிலும் இருக்கும் என்றும் தெரிவித்ததோடு, விளையாட்டின் மூலம் எமது இளைய சமுதாயம் ஒற்றுமைப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு விளையாட்டின்போது சில சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் ஆனால் குறித்த விளையாட்டு நிகழ்வுகள் முடிவடையும்போது வீரர்கள் சமாதானமாக ஒற்றுமைப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி ச.மரிய செபஸ்டியன் அடிகளாரும், அருட்பணி எஸ்.வசந்தன் அடிகளாரும் கலந்துகொண்டதோடு, கெளரவ விருந்தினர்களாக கிளிநொச்சி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எம்.நிமலதாசன், புனித அன்னம்மாள் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் ஜோசெப் பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அமைச்சர் அவர்கள் அங்கு தொடர்ந்து தனது உரையில், கடந்த வருடம் தன்னால் வாக்குறுதி வழங்கப்பட்டதுபோல ஏறக்குறைய 12 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வலைப்பாடு கிராஞ்சி வீதியின் ஒரு பகுதியை புனரமைத்துள்ளதாகவும், கிராஞ்சி பாடசாலையின் பெளதீக வளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கிக்கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியதோடு, மீதமாக இருக்கின்ற வீதியினை A 32 பிரதான வீதியுடன் இணைக்கும்வரை தனது நடவடிக்கைகள் தொடரும் எனவும் குறிப்பிட்டதோடு, குறித்த ஜெக மீட்பர் விளையாட்டுக் கழகத்திற்கும், புனித ஆனாள் விளையாட்டுக் கழகத்திற்கும், புனித ஆனாள் ஆலயத்திற்கும், வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் இருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள பெண்கள் அணிக்கும், அன்றய தினம் அடிக்கல் நாட்டப்பட்ட ஜெக மீட்பர் விளையாட்டுக்கழக மைதானத்தின் அரங்கிற்கும் அடுத்த வருட தன்னுடைய நிதி ஒதுக்கீட்டில் (CBG) தலா 50,000 ரூபாய் வீதம் தருவதாகவும் உறுதியளித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.deniswaran
SHARE