திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்;பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் 4 தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் மத்திய மாகாண வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கத்தினருடன் இணைந்து நடத்திய 9வது வருடாந்த போட்டி கடந்த வாரம் 16.17ம் திகதிகளில் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர், ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கு கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளார்.
05.09.1924ம் வருடம் மட்டக்களப்பில் பிறந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை தனது பாடசாலை கல்வியை மட்டு புனித மிக்கேல் கல்லூரியில் மேற்கொண்டார்.
13 வயதில் திறந்த விளையாட்டு போட்டிகளில் மரதன் ஓட்டத்தில் பங்கு கொண்டு தனது விளையாட்டு வெற்றியினை ஆரம்பித்தார். பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடத்தப்படும் மரதன் ஓட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வெற்றிகளை தனதாக்கி கொண்டார்.
24 வயதில் அரச சேவையில் இணைந்து கொண்ட இவர் கண்டி, பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கச்சேரியில் இலிகிதராக பணியாற்றினார்.
1964ம் திருகோணமலை கடற்படைத்தளத்தில் சிவில் அலுவலகத்தில் கணக்கு பரிசோதகராக பணி உயர்வு பெற்று சேவையாற்றி 1974ம் வருடம் ஓய்வு பெற்றுக் கொண்டார்.
6 ஆண் பிள்ளைகளின் தந்தையாகிய இவர் தொடரந்து விளையாட்டு துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். 2014ம் வருடம் நுவரெலியாவில் நடைபெற்ற போட்டியிலும் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர் நீளம் பாய்தல் போட்டிகளில் பங்கு கொண்டு தங்கப்பதக்கத்pதை பெற்றிருந்தார்.
2015ம் வரும் தனது சுகயீனம் காரணமாக வேக நடை போட்டியில் மாத்திரம் பங்கு கொண்டு முதலிடம் பெற்றிருந்தார்.
5 ஆண் சகோதரர்களுடனும். 3 பெண் சகோதரிகளுடனும் பிறந்த இவர் குடும்பத்தில் மூத்த உறுப்பினராவார் இவரது சகோதரர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
தனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டி இவர் தனது முதல் மகனை வைத்தியனாகவும். 2ம் 3ம், 5ம், 6ம் பிள்ளைகளை பொறியிலாராகவும். 4வது மகனை மாலுமியாகவும் பயிற்றுவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் அல்பிரட் நொயல் செல்லப்பிள்ளை வருங்கால சமுதாயம் விளையாட்டு துறையில் ஆர்வம் கொண்டு மாவட்டத்திற்கும். நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இளையவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.
அடுத்த வருடம் பங்குனி மாதம் கொழும்பில் நடைபெற உள்ள அடுத்த போட்டிக்கு தன்னை தயார் படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ள அவர் இப்போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல முதியவர்களை அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.